குடிநீர் தட்டுப்பாட்டால்2 இடங்களில் மறியல்
குடிநீர் தட்டுப்பாட்டால்2 இடங்களில் மறியல் சத்தியமங்கலம்:சத்தியமங்கலம் அருகேயுள்ள ராஜன்நகர் ஊராட்சிக்கு உட்பட்ட ஊர் கஸ்துாரி நகரில், 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களுக்கு குடிநீர் வினியோகம் சரிவர இல்லை என்று தெரிகிறது. இந்நிலையில், 60க்கும் மேற்பட்டோர், ராஜன்நகர்-பவானிசாகர் சாலையில் நேற்று காலை மறியலில் ஈடுபட்டனர். சத்தி வட்டார வளர்ச்சி அலுவலர்கள், போலீசார் பேச்சுவார்த்தையை தொடர்ந்து, மறியலை கைவிட்டனர். இதனால், 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.* தாளவாடி அருகே நேதாஜி சர்கிள் பகுதிக்கு, ஒரு வாரமாக குடிநீர் வினியோகம் தடைபட்டுள்ளது. ஊராட்சி அதிகாரிகளிடம் கூறியும் நடவடிக்கை இல்லை. நேற்று மதியம், 40 க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். தாளவாடி வட்டார வளர்ச்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தையை தொடர்ந்து மறியலை கைவிட்டனர். உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம், தாளவாடியில் நேற்று நடந்தது. இதில் கலெக்டர் பங்கேற்றிருந்தார். இந்த சமயத்தில் மக்கள் மறியலில் ஈடுபட்டதால், அதிகாரிகள் திக்குமுக்காடி போயினர்.