| ADDED : ஜூலை 17, 2024 02:20 AM
சென்னிமலை:சென்னிமலை பேரூராட்சியில், 15 வார்டுகளில் உள்ள மக்களுக்கு, காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் குடிநீர் வழங்கப்படுகிறது. கடந்த மூன்று மாதங்களாக, 20 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் கிடைக்கிறது. இதனால் மக்கள் குடிநீருக்காக சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. சீராக குடிநீர் வழங்க வலியுறுத்தி, கலெக்டர் மற்றும் அதிகாரிகளிடம், அ.தி.மு.க., சார்பாக கடந்த மாதம் மனு தரப்பட்டது. அதன் பிறகும் பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. அதேசமயம் நகரில் பல இடங்களில் ஜல் ஜீவன் திட்டத்துக்கு தோண்டிய குழிகளை முறையாக மூடாததால், தினமும் விபத்து நடக்கிறது. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னிமலை நகர அ.தி.மு.க., செயலாளர் ரமேஷ், ஒன்றிய செயலாளர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட நுாற்றுக்கும் மேற்பட்ட கட்சியினர், பேரூராட்சி அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னிமலை போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து, அரை மணி நேரத்தில் மறியல் முடிவுக்கு வந்தது.இதுகுறித்து நகர செயலாளர் ரமேஷ் கூறியதாவது: அமைச்சர் சாமிநாதன் தொகுதியிலேயே, குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணாமல், பேரூராட்சி அதிகாரிகள் மெத்தனம் காட்டுகின்றனர். மனு கொடுத்தும் மாவட்ட மற்றும் பேரூராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாததால், மக்களை திரட்டி சாலை மறியல் ஈடுபட்டோம். இதன் பிறகும் தீர்வு காணாவிட்டால், மாபெரும் போராட்டத்தை சந்திக்க வேண்டி இருக்கும். இவ்வாறு கூறினார்.