| ADDED : ஜூலை 26, 2024 12:53 AM
ஈரோடு,:ஈரோடு அருகே சோலார் ஈ.பி.நகரில் குடியிருப்பு பகுதியில் நள்ளிரவில் மர்ம நபர் நடமாட்டம் இருப்பதை மக்கள் உணர்ந்தனர். இதனால் பல இடங்களில் 'சிசிடிவி' கேமராக்களை பொருத்தினர். இதில் கடந்த, 9ம் தேதி ஒரு ஆசாமி, கையில் கத்தியுடன் வீட்டு கதவை நள்ளிரவில் தட்டுவது, காலிங் பெல்லை அழுத்தும் செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது. மொடக்குறிச்சி போலீசாருக்கு மக்கள் தகவல் தெரிவித்தனர். மக்கள் கூறியதாவது:நள்ளிரவில் குடியிருப்பு பகுதியில் நடமாடும் நபர் குறித்து போலீசார் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வீடுகளின் கதவை தட்டுவது, காலிங் பெல் அடிப்பது இன்றளவும் அவ்வப்போது தொடர்கிறது. இதனால் இரவில் வீட்டுக்கு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வீடு, வீடாக கதவை தட்டுவது, காலிங் பெல்லை அடித்து சிறிது நேரம் நிற்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதால் திருடனாக இருக்க முடியாது. இது மேலும் அச்சத்தை அதிகப்படுத்துகிறது. அந்த நபர் சைக்கோவாக இருக்கக் கூடும் என நம்புகிறோம். நள்ளிரவில் அந்த நபர் கண்களில் படும் நபர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அச்சம் உள்ளது. இவ்விஷயத்தில் போலீசார் துரிதமாக செயல்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மக்கள் கூறினர்.