ஒருங்கிணைந்த மார்க்கெட் வளாகத்துக்கு அனுமதி
ஈரோடு: ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மற்றும் பழ மார்க்கெட் வியாபாரிகள், ஒருங்கிணைந்த காய்கறி, பழங்கள், மளிகை சந்தை அமைக்க, மாநகராட்சி நிர்வாகத்திடம், கோரிக்கை விடுத்திருந்தனர். இதன் அடிப்படையில் சோலாரில், 18.48 கோடி ரூபாய் மதிப்பில், ஒருங்கிணைந்த வளாகம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டது. இதற்கு மாநகராட்சியும் நிர்வாக அனுமதி வழங்கியது.இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: 116 கடைகளுடன் மூன்று இடங்களில் கட்டடங்கள், காய்கறி, பழங்கள் மற்றும் அரிசி போன்ற மளிகை பொருட்களை இருப்பு வைக்க பெரிய அளவிலான குடோன்கள், குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகளுடன் அமைக்கப்பட உள்ளது. கேண்டீனுக்கு தனி வளாகத்துடன் கட்டடம் கட்டப்பட உள்ளது. ஒருங்கிணைந்த சந்தை வளாகம் கட்டப்பட்டதும், ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் செயல்படும் தற்காலிக காய்கறி, பழ மார்க்கெட் கடைகள் இங்கு இடமாற்றம் செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.