உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தேர்தல் ஆணைய கெடுபிடியால் சூடு பிடிக்காத பிரசாரம் அரசியல் கட்சியினர், சுயேட்சை வேட்பாளர் குமுறல்

தேர்தல் ஆணைய கெடுபிடியால் சூடு பிடிக்காத பிரசாரம் அரசியல் கட்சியினர், சுயேட்சை வேட்பாளர் குமுறல்

ஈரோடு:லோக்சபா தேர்தலில் நேற்று முன்தினம் வேட்பு மனு பரிசீலனை முடிந்தது. முக்கிய கட்சி வேட்பாளர்கள், சுயேட்சைகளின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. ஓட்டுப்பதிவுக்கு இன்னும், 21 நாட்களே உள்ள நிலையில், நாளை சின்னத்துடன் கூடிய இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. தி.மு.க., - அ.தி.மு.க., - பிற கூட்டணியிலும் வேட்பாளர்கள் அறிவித்து பல நாட்களாகியும், வேட்பு மனு இறுதியான போதிலும், பிரசாரம் சூடுபிடிக்காத நிலையே நீடிக்கிறது.இதுபற்றி வேட்பாளர்கள் தரப்பில் கூறியதாவது: ஒரு லோக்சபா தொகுதியில் ஆறு சட்டசபை தொகுதிகள் உள்ளன. இன்னும், 20 நாட்களே உள்ள நிலையில், ஒரு தொகுதிக்கு, 3 முதல், 4 நாட்கள் கூட கிடைக்காது. தொகுதி முழுவதும் காரில் கூட சுற்றி வர முடியாது. இதற்கிடையில் தலைவர்கள் வருகை, பொதுக்கூட்டம் இருக்கும்.இதற்கு நடுவில் பிரசாரம் செய்யும் முன், 48 மணி நேரத்துக்கு முன் தேர்தல் ஆணைய 'ஆப்பில்' அனுமதி பெற வேண்டியுள்ளது. தலைவர் வருகை, கூட்டணி கட்சியினர் அழைப்புக்கு ஏற்ப இடத்தை மாற்றுதல் போன்றவை செய்தால், 'அனுமதி இல்லை' எனக்கூறி, பறக்கும் படை அதிகாரிகள் தடுத்துவிடுகின்றனர்.காலை, மாலை பிரசாரம் செய்யும்போது, வெவ்வேறு பகுதிக்கு சென்றால், எங்கு சென்றாலும் ஒரு குழு அதிகாரிகள் வந்து, அனுமதியை உறுதி செய்கின்றனர். 'இந்த பகுதியில் பிரசாரத்துக்கு அனுமதி இல்லை' என்பதால், அனுமதி பெறுவதும், சரியாக அங்கு பிரசாரம் செய்வதே பிரச்னையாக உள்ளது.கூட்டணி கட்சியினர் பிரச்னை, அழைப்பதிலும், வருவதிலும் தாமதம், குறுகிய நாட்களுக்குள் அனைத்து பகுதிக்கும் செல்வதில் சிரமம் ஏற்படுவதால், வேட்பாளர்களை பார்க்கவே முடியவில்லை என கேட்கின்றனர். பல்வேறு பகுதி ஒன்றிய, நகர நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் தங்கள் பகுதியில் செல்வாக்கை காட்ட நினைத்து அழைத்தாலும், செல்லமுடியவில்லை.இதனால், வேட்பாளர் பெயர், சின்னத்தை வாக்காளரிடம் கொண்டு சேர்க்க வேண்டும். மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், எத்தனையாவது இடத்தில் தங்கள் பெயர், சின்னம் உள்ளது என்பதை வேட்பாளர் மனதில் பதிய வைக்க வேண்டிய நிலை உள்ளது. அதற்கு கூட நேரம் இல்லாதபடி நெருக்கடியாக உள்ளது. பல ஊர்களில் தி.மு.க., - அ.தி.மு.க., வேட்பாளர்களின் பெயர், சின்னம் கூட தெரியாத நிலை உள்ளதை பார்க்க முடிகிறது. முன்பு போல, அந்தந்த பகுதி போலீஸ் ஸ்டேஷன்களில் அல்லது சப்-டிவிஷன் அளவில் அனுமதி பெற்று, அதனை ஆன்லைனில் ஏற்றினால் போதும் அல்லது, அதிகாரிகள் ஆய்வில் காண்பித்தால் போதும் என்ற முறையை கொண்டு வர வேண்டும். இவ்வாறு புலம்பி தள்ளினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ