| ADDED : மே 30, 2024 08:46 PM
ஈரோடு:ஈரோடு அரசு மருத்துவமனையில் ஸ்ட்ரெச்சர் இல்லாததால், சிகிச்சைக்கு அழைத்து வந்த தாயை, மகள் துாக்கி சென்ற விவகாரத்தில், 'ஒப்பந்த பணியாளரே காரணம்' என்று, மருத்துவமனை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.ஈரோடு, பெரியவலசை சேர்ந்தவர் சொர்ணா, 75; டூவீலர் மோதி காலில் காயமடைந்தார். ஈரோடு அரசு மருத்துவமனைக்கு, அவரின் மகள் வளர்மதி சிகிச்சைக்கு அழைத்து வந்தார். ஸ்ட்ரெச்சர், வீல் சேர் இல்லாததால் தாயை கைகளால் ஏந்திப்பிடித்து துாக்கி சென்றார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை உத்தரவிட்டது.இதன்படி ஈரோடு அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் வெங்கடேஷ், உறைவிட மருத்துவர் சசிரேகாவுக்கு, மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் அம்பிகா சண்முகம், 'மெமோ' வழங்கி விசாரித்தார். பாதிக்கப்பட்ட வளர்மதி, மருத்துவ பணியாளர், தனியார் நிறுவன ஒப்பந்த பணியாளர்களிடம் இணை இயக்குனர் விசாரணை நடத்தினார்.இதுபற்றி அம்பிகா சண்முகம் கூறியதாவது: பாதிக்கப்பட்டவர், டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள், ஒப்பந்த பணியாளர்களிடம் தனித்தனியாக விசாரித்து, விளக்கம் பெற்றுள்ளேன். இதுகுறித்த அறிக்கை, கலெக்டர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி, அவர்கள் வழிகாட்டுதலின்படி நடவடிக்கை எடுக்கப்படும். இப்பிரச்னைக்கு தனியார் நிறுவன ஒப்பந்த பணியாளர் காரணம் என்பது உறுதியாகி உள்ளது. ஆனால், அவர் அளித்த வாக்குமூலத்தில் கையெழுத்திட மறுத்து வருகிறார். இருப்பினும் அவர் மீது நிர்வாக ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். இதனால் ஒப்பந்த பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நடவடிக்கை உத்தரவு வந்ததும், போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.