ஈரோடு: விற்பனை ஆகாததால் ஈரோட்டில் வாய்க்காலிலும், சாலையோரத்திலும் தக்காளியை கொட்டி சென்றனர்.ஈரோடு வ.உ.சி., பூங்கா காய்கறி மொத்த மார்க்கெட்டுக்கு தினமும், 5,000 முதல், 7,000 பெட்டிகளில் தக்காளி வரத்தாகும். நேற்று, 6,000 பெட்டி வரத்தானது. தாளவாடி, கொள்ளேகால், கிருஷ்ணகிரி உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வரத்தாகிறது. நேற்று, 25 கிலோ எடை கொண்ட பெட்டி, 500 ரூபாய்க்கு விற்பனையானது. கடைகளில் ஒரு கிலோ, 15 முதல், 20 ரூபாய் வரை விற்பனையானது. தற்போது விளைச்சல் அதிகமாக உள்ளதால், அதிகமாக வரத்தாகி விலை குறைந்து, விற்பனையாகாமல், மீதமாவதை வியாபாரிகள் எடுத்து செல்ல வழியின்றி, குப்பை, சாலையோரம், கால்வாயிலும் கொட்டி செல்கின்றனர்.ஈரோடு கனி ராவுத்தர் குளம் முதல், எல்லப்பாளையம் செல்லும் சாலையில் வாரச்சந்தை நேற்று முன்தினம் நடந்தது. இங்கு விற்பனைக்கு அதிகமாக தக்காளி வந்ததால், 15 முதல், 20 ரூபாய்க்கு மேல் விலை போகவில்லை. இதனால் கனிராவுத்தர் குளத்துக்கு செல்லும் வாய்க்கால், கழிவுநீர் வாய்க்கால், எல்லப்பாளையம் செல்லும் சாலையோரங்களில், தக்காளியை கொட்டி சென்றனர்.