| ADDED : மார் 11, 2024 02:01 AM
ஈரோடு:ஈரோட்டில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை செயல்படுகிறது. இங்கு, 610 படுக்கைகள் உள்ளன. தினமும் ஆயிரக்கணக்கான புற நோயாளிகள், நுாற்றுக்கணக்கான உள் நோயாளிகள் பல்வேறு சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மருத்துவமனையை மேம்படுத்த, 2020ல் தமிழக அரசு, 67.76 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்தது. இதை தொடர்ந்து தற்போதைய அரசு மருத்துவமனை பின்புற வளாகத்தில் கட்டுமான பணி தொடங்கி, 8 தளங்கள் கொண்ட கட்டடம் கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு தளமும், 27,500 சதுர அடி கொண்டது. தரைத்தளத்தில் பார்க்கிங் வசதி, முதல் தளத்தில் அவசர பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு(ஐ.சி.யு), 5 பிரத்யேக அறுவை சிகிச்சை அரங்குகள், செவிலியர், டாக்டர்களுக்கு பணியிடை பயிற்சி வழங்க வகுப்பறை என அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் சிகிச்சை பெறும் பயனாளிகளின் வசதிக்காக ஒரு தளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்க தனித்தனி பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. இதை வரும், 13ல் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடக்கும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின், காணொலி மூலம் திறக்க உள்ளார்.