அரசு பஸ் மீது மோதிய கார்; 3 பேர் உயிர் தப்பினர்
பு.புளியம்பட்டி, நவ. 10-சத்தியமங்கலத்தில் இருந்து கோவைக்கு ஒரு அரசு பஸ், 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் நேற்று காலை புறப்பட்டது. பஸ்ஸை டிரைவர் நசீர் பாட்சா ஓட்டினார். புன்செய்புளியம்பட்டி அடுத்த நல்லுார் மாதேஸ்வரன் கோவில் அருகே, இரட்டை பாலத்தில் வளைவில் பஸ் திரும்பிய போது, எதிரே சத்தி நோக்கி உடுமலையை சேர்ந்த முருகானந்தம், 40, ஓட்டி வந்த எர்டிகா கார், பஸ் மீது மோதியது. அதன் பிறகும் நிற்காமல் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. காரில் ஏர்பேக் இருந்ததால் முருகானந்தம் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். பின் சீட்டில் அமர்ந்து வந்த அவரது தந்தை தண்டபாணி, முன் சீட்டில் அமர்ந்து வந்த மகன் சரனேஷ், 13, காயமடைந்தனர். அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் காயமடைந்த இருவரையும் மீட்டு சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அரசு பஸ்ஸில் பயணித்தோர் காயமின்றி தப்பினர். வளைவில் கார் திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்து அரசு பஸ் மீது மோதியதாக, புன்செய்புளியம்பட்டி போலீசார் தெரிவித்தனர்.