உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பெட்ரோல் பங்க் கணக்கில் ரூ.2 கோடி கையாடல் செய்த அக்கவுன்டன்ட் கைது

பெட்ரோல் பங்க் கணக்கில் ரூ.2 கோடி கையாடல் செய்த அக்கவுன்டன்ட் கைது

ஈரோடு, லாரி உரிமையாளர் சங்க பெட் ரோல் பங்க் கணக்கில், 2 கோடி ரூபாய் கையாடல் செய்த அக்கவுன்டன்ட் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம், பவானி லாரி உரிமையாளர் சங்க தலைவராக இருப்பவர் செல்வராஜ், 61. இவரது வீடு பவானி லட்சுமி நகரில் உள்ளது. இவர், ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:சேலம், புள்ள கவுண்டன்பட்டி, வினோபா நகரை சேர்ந்தவர் ஜெயசீலன், 47. குமாரபாளையம், பவானி லாரி உரிமையாளர் சங்கத்துக்கு சொந்தமான, மூன்று பெட்ரோல் பங்க் கணக்கு வழக்குகள், வணிக வரி, வருமான வரி, வங்கி கணக்கு விவகாரம் உள்ளிட்டவற்றை பார்த்து வந்தார். சங்க பெட்ரோல் பங்க் அக்கவுன்டன்டாகவும் பணியாற்றினார்.கடந்த, 2022 முதல் இதுவரை உள்ள கணக்கு வழக்கில் சந்தேகம் இருந்தது. எனவே, கணக்குகளை சரி பார்த்தேன். அப்போது, 2 கோடி ரூபாய் வரை ஜெயசீலன், அதாவது தலைவரான என் மொபைல் போன் எண்ணுக்கு வர வேண்டிய, பண விவகார ஓ.டி.பி.,யை, தன் மொபைல் போனுக்கு வர செய்து கையாடலில் ஈடுபட்டுள்ளார். அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.இன்ஸ்பெக்டர் சங்கீதா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். இதில், கையாடல் செய்து, தன் வங்கி கணக்கில் ஜெயசீலன், பணம் பரிமாற்றம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் மீது கையாடலில் ஈடுபட்டதாக, நேற்று முன்தினம் வழக்குப்பதிந்து கைது செய்தனர். ஜெயசீலனிடம் இருந்து பணம், சொத்துக்கள் ஏதும் பறிமுதல் செய்யப்படவில்லை. கையாடலுக்கு யாரெல்லாம் உடந்தையாக செயல்பட்டனர் என்பது குறித்து, தொடர் விசாரணையில் தெரிய வரும். அவ்வாறு வேறு யாரேனும் ஈடுபட்டிருந்தால், அவர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்படுவர் என, போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி