| ADDED : ஜன 26, 2024 10:10 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தில், 4.19 லட்சம் வீடுகளுக்கான குடிநீர் இணைப்பில், மீதி, 64,400 குடிநீர் இணைப்புகள் விரைவில் வழங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.ஊரக பகுதிகளில் அனைத்து வீடுகளுக்கும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டதை ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தில் உறுதி செய்து வருகின்றனர்.இதன்படி ஈரோடு மாவட்டத்தில் நான்கு லட்சத்து, 18 ஆயிரத்து, 981 வீடுகளுக்கு இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர்கள் கூறியதாவது: கடந்த, 2020 ஏப்., 1க்கு முன் ஊரக பகுதிகளில் பிற திட்டங்களில், 64,412 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கினர். 2020-21ல் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தில், 96,656 வீடுகளுக்கு இணைப்பு தரப்பட்டது. தொடர்ந்து, 2021 முதல் தற்போது வரை, ஜல்ஜீவன் மிஷன் மற்றும் பிற குடிநீர் திட்டங்கள் மூலமும், மூன்று லட்சத்து, 54,581 குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுவிட்டது.மலைப்பகுதி, மேல்நிலை குடிநீர் தொட்டி இல்லாத இடங்கள் என, 64,400 வீடுகளுக்கு இன்னும் குடிநீர் இணைப்பு வழங்க வேண்டியுள்ளது. இவ்வீடுகளுக்கும் விரைவாக குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு கூறினர்.