பயன்பாட்டில் உள்ள சாலையில் கல் நட முயற்சி: இரண்டாவது முறையாக நடந்ததால் பரபரப்பு
சென்னிமலை: சென்னிமலை யூனியன் சிறுகழஞ்சி ஊராட்சியில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். பல கிராமங்களை ஒன்றிணைக்கும் பிரதான சாலையாக, கிழக்கு தோட்டம் புதுார் சாலையை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த, 1997ல் தார்ச்சாலையாக மாற்றப்பட்டு சென்னிமலை யூனியனுக்கு சொந்தமாக பயன்பாட்டில் உள்ளது. பொது போக்குவரத்துக்கு பெரிதும் உதவியாக உள்ளது.இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன், சாலையை தனக்கு சொந்தமானது என்றும், தனது பட்டா நிலத்தில் இருப்பதாகவும் கூறி, கடந்த ஆண்டு ஏப்., மாதம், கல் நட்டு கம்பி வேலி அமைக்க முயன்றார். பொதுமக்கள் ஒன்று சேர்ந்து தடுத்து நிறுத்தி விட்டனர். இந்நிலையில் நேற்று மீண்டும் கல் நட்டு, கம்பி வேலி அமைக்க முயன்றார். இதையறிந்து நுாற்றுக்கும் மேற்பட்ட மக்கள் திரண்டனர். சென்னிமலை எஸ்.ஐ., சரவணன் தலைமையிலான போலீசார், இருதரப்புக்கும் தகராறு ஏற்படாமல் பாதுகாத்தனர்.பெருந்துறை தாசில்தார் செல்வகுமார் அங்கு வந்தார். மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, தற்போது கல் நட்டு கம்பி வேலி போட மாட்டார்கள். இதுகுறித்து பிறகு பேசி முடிவு செய்து கொள்ளலாம் என்று உறுதி கூறினார். இதையடுத்து மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில், மூன்று மணி நேரம் பரபரப்பு நிலவியது.