சம்பந்தமே இல்லாமல் மாணவியை தாக்கிய போதை ஆசாமியால் பகீர்
ஈரோடு, ஈரோடு மாநகரை சேர்ந்த, 14 வயது சிறுமி, எம்.எஸ்.சாலையில் உள்ள பள்ளிக்கு ஆட்டோவில் சக மாணவியருடன் நேற்று காலை சென்றார். ஆட்டோவில் இருந்த மற்றொரு மாணவி, ப.செ.பார்க் அருகேயுள்ள ஒரு பள்ளியில் இறங்கினார். இதனால், 14 வயது சிறுமி கீழே இறங்க நேரிட்டது.அப்போது வந்த ஆசாமி, 14 வயது சிறுமியின் தோளில் மாறிமாறி அடித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர், அப்பகுதி மக்கள் ஆசாமியை பிடித்து கவனித்தனர். பிறகு அவசர போலீஸ் எண்ணுக்கு தகவல் தரப்பட்டது.டவுன் போலீசார் சென்று ஆசாமியை, ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். விசாரணையில் ஈரோடு டீசல் செட் பகுதி பெரிய தோட்டத்தை சேர்ந்த சீனிவாசன், 40, என தெரிந்தது. கூலி தொழிலாளியான அவர், மதுபோதையில் இருந்தார். ஈரோடு அரசு மருத்துவமனையில் அவருக்கு பரிசோதனை நடந்தது. இதையடுத்து அவரிடம் எழுதி வாங்கிக்கொண்டு, போலீசார் எச்சரித்து அனுப்பினர்.