| ADDED : ஆக 21, 2024 02:41 AM
நம்பியூர்;நம்பியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி, பவர் டேபிள் (பனியன் உற்பத்தியாளர்) சங்கத்தினர், வேலை நிறுத்த போராட்டத்தால், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.ஈரோடு மாவட்டத்தில் நம்பியூர், அந்தியூர், புளியம்பட்டி, கெட்டிச்செவியூர், கொளப்பலுார் உள்ளிட்ட பகுதிகளில், 2,000க்கும் மேற்பட்ட பவர் டேபிள் நிறுவனங்கள் (பனியன் உற்பத்தியாளர்கள்) உள்ளன. இவை உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், பல லட்சம் மதிப்பிலான பனியன் தேக்கமடைந்துள்ளது.திருப்பூரில் இயங்கும் உள்நாட்டு பனியன் விற்பனை நிறுவனங்களுக்கு, ஜாப் ஒர்க் முறையில் பவர் டேபிள் நிறுவனங்கள் துணியை பெற்று, பனியன் மற்றும் உள்ளாடை ரகங்களை தைத்து வழங்குகின்றனர். இதில் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை கூலி உயர்வு நிர்ணயம் செய்யப்படுகிறது. இதன்படி கடந்த ஜூன் மாதம், புதிய கூலி அமல்படுத்தியிருக்க வேண்டும். இரண்டு மாதங்களாகியும் கூலி உயர்வு வழங்கவில்லை. கூலி உயர்வை வழங்காவிட்டால், உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக, பவர் டேபிள் சங்கம் மகாசபை அறிவித்தது. மேலும், 7 சதவீத கூலி உயர்வு வழங்குமாறு வலியுறுத்தினர்.இந்நிலையில் கூலி உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்காததால், நேற்று முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பவர் டேபிள் நிறுவனங்கள், உற்பத்தி நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளன. ஆர்டர் பெறாமலும், டெலிவரியை நிறுத்தியும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.