லாட்ஜில் துப்பாக்கியுடன் தோட்டா; மர்ம நபரை பிடிக்க இரு தனிப்படை
ஈரோடு: ஈரோடு லாட்ஜில், தோட்டாக்களுடன் துப்பாக்கி கிடைத்த விவகாரத்தில், மர்ம நபரை பிடிக்க இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு, சத்தி சாலையில் ஆர்.ஆர். லாட்ஜ் அறை ஒன்றில் கடந்த, 25 மாலை படுக்கை தலையணைக்கு அடியில் இருந்து ஒரு துப்பாக்கி, ஆறு தோட்டாக்கள் ஈரோடு டவுன் போலீசாரால் கண்டெடுக்கப்பட்டது. அறை எடுத்து தங்கிய நபர் பெயர் சுரேந்திரன், 42, கான்பூர், உத்தரபிரதேச மாநிலம், என்ற பெயரில் தங்கி உள்ளார். முகவரி, மொபைல் எண் உள்ளிட்டவற்றை பெற்று, ஈரோடு டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.துப்பாக்கியை தோட்டாவுடன் தவற விட்ட நபர், மீண்டும் அறைக்கு வந்து அவற்றை எடுத்து செல்ல வருவார் என்பதால், போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர். ஆனால், இதுவரை யாரும் துப்பாக்கி, தோட்டாக்களை பெற்று செல்ல வரவில்லை. எனவே, குற்ற செயலில் ஈடுபடுவதற்காகவே தோட்டாவுடன் துப்பாக்கியை, மர்ம நபர் கொண்டு வந்தது உறுதியாகி உள்ளது.இது குறித்து போலீசார் கூறியதாவது: துப்பாக்கியை விட்டு சென்ற நபரை கண்டுபிடிக்க, ஈரோடு டவுன் டி.எஸ்.பி., முத்துகுமரன் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் கோமதி, விஜயன் ஆகியோரை கொண்ட இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. நாமக்கல் மாவட்டம், வெப்படையில் பிடிபட்ட மேவாட் கொள்ளை கும்பலை சேர்ந்த நபர், ஈரோட்டில் லாட்ஜ் எடுத்து தங்கினாரா? என்ற சந்தேகம் எழுந்தது. ஈரோடு டவுன் இன்ஸ்பெக்டர் கோமதி, வெப்படைக்கு நேரில் சென்று பிடிபட்ட கும்பலை சேர்ந்தவர்கள் புகைப்படமும், ஈரோடு ஆர்.ஆர்.லாட்ஜில் தோட்டாவுடன் துப்பாக்கியை விட்டு சென்ற நபரின் போட்டோவும் ஒன்றாக உள்ளதா? என ஆய்வு செய்து விசாரித்தார்.ஆனால், பிடிபட்ட கொள்ளையர்கள் இல்லை என்பது தெரியவந்தது. கடந்த, 23 முதல் 25 மதியம் வரை, ஆர்.ஆர்.லாட்ஜ் பகுதி மொபைல் போன் டவர்களுக்கு வந்து சென்ற மொபைல் போன் எண்களை பட்டியலிட்டு, சரிபார்த்து விசாரித்து வருகின்றனர். லாட்ஜ் அறையில் அந்த நபர் தங்கியிருந்த போது, அவர் பயன்படுத்திய வாகனம் குறித்து, போலீசார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர். இவ்வாறு கூறினர்.