உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கண்டிஷன் பட்டா பிரச்னைக்கு விரைவில் தீர்வு முதல்வரிடம் பேசி உள்ளதாக கலெக்டர் தகவல்

கண்டிஷன் பட்டா பிரச்னைக்கு விரைவில் தீர்வு முதல்வரிடம் பேசி உள்ளதாக கலெக்டர் தகவல்

ஈரோடு, டிச. 27-ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:காளிங்கராயன் பாசன சபை குழந்தைவேலு: நீர் பாசன கருத்தரங்கு நடத்த வேண்டும். மஞ்சள் அறுவடைக்கு கூலி அதிகமாவதால், மாவட்ட நிர்வாகம் இயந்திரம் உட்பட மாற்று திட்டத்தை ஏற்படுத்த வேண்டும்.ஓடத்துறை ஏரி பாசன சங்க வெங்கடாசலம்: கீழ்பவானி, 2ம் போக பாசனத்துக்கு ஜன., முதல் வாரம் தண்ணீர் திறப்பதுடன், கிளை வாய்க்கால்களை துார்வார வேண்டும். கோபி - செங்கப்பள்ளி - 4 வழிச்சாலைக்காக சாலையின் இரு புறமும் ஏராளமான புளிய மரங்கள் வெட்டுவதை தவிர்க்க வேண்டும்.தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம், சிவசுப்பிரமணி: ஆவினில், 18 கோடி ரூபாய் மதிப்பில், 600 டன் பால் பவுடர் தேக்கம் அடைந்துள்ளது. ஆவினில் பால் பொருட்கள், இனிப்பு, காரம் செய்ததில் மோசடி பற்றி விசாரணை நடந்தாலும், நடவடிக்கை இல்லை. அவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிய வேண்டும். ஆவினில் கால்நடை தீவன ஆலையிலும் தீவனங்கள் திருட்டு நடக்கிறது.* பவானிசாகர் அணை செயற்பொறியாளர்: பவானி ஆற்றில் சட்ட விரோத தண்ணீர் திருட்டு கண்டுபிடிக்கப்பட்டு, 5 இடங்களை அகற்றி உள்ளோம். அவசர கால ஷட்டர் சீரமைக்கப்படும்.* கால்நடை துறை அதிகாரிகள்: வெறிநாய் தடுப்பூசி, கால்நடை மருந்தகங்களில் இருப்பு உள்ளது. அந்தந்த உள்ளாட்சி அமைப்பு மூலம் முகாம் அமைத்து நாய்களுக்கும், பிற செல்ல பிராணிகளுக்கும் செலுத்தலாம். அந்தியூர் பகுதியில் தடுப்பூசி செலுத்திய ஆடுகள் இறந்தது பற்றி விசாரணை நடக்கிறது. ஆடுகளின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்ததும், நடவடிக்கை எடுக்கப்படும்.* கலெக்டர்: காளிங்கராயன் வாய்க்கால் விவசாயிகள் கோரிக்கைக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்தப்படும். அனைத்து வாய்க்கால்களிலும் தேவையான இடங்களில் துார்வார நடவடிக்கை எடுக்கப்படும். நெல், கரும்பு, மரவள்ளி கிழங்கு போன்றவைகளுக்கு ஆதார விலை நிர்ணயிக்க கோரினர். இதுபற்றி, அந்தந்த துறை இயக்குனருக்கு தெரிவிக்கப்படும்.இம்மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் உள்ள, 'கண்டிஷன் பட்டா' குறித்து, சமீபத்தில் ஈரோடு மாவட்டம் வந்த முதல்வரிடம் தெரிவித்துள்ளோம். விரைவில் அரசாணை வரும். வளர்ச்சி திட்டப்பணிகளின் போதும், சாலை விரிவாக்கத்திலும் மரங்கள் வெட்டப்படும். ஒரு மரத்துக்கு பதில் அதே இடத்தில் அல்லது வேறு இடத்தில், 10 மரங்கள் நடப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை