உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / போக்குவரத்துக்கு இடையூறான ஆக்கிரமிப்பைதாங்களாகவே அகற்ற மாநகராட்சி வலியுறுத்தல்

போக்குவரத்துக்கு இடையூறான ஆக்கிரமிப்பைதாங்களாகவே அகற்ற மாநகராட்சி வலியுறுத்தல்

ஈரோடு ஈரோடு மாநகராட்சியில் ஆக்கிரமிப்பாக அமைந்துள்ள, சாய்வுதளம் மற்றும் விளம்பர பதாகை அகற்றுவது தொடர்பான ஆலோசனை கூட்டம், மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு துணை கமிஷனர் தனலட்சுமி தலைமை வகித்தார். தலைமை பொறியாளர் விஜயகுமார், நகர திட்டமிடுனர் செந்தில் பாஸ்கர் முன்னிலை வகித்தனர். மாநகராட்சி பகுதியின் அனைத்து கடைகள் மற்றும் தொழில் நிறுவன உரிமையாளர், வணிக சங்கத்தினர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நகர திட்டமிடுனர் செந்தில் பாஸ்கர் கூறியதாவது:மாநகராட்சியில் போக்குவரத்து பொதுமக்களுக்கு இடையூறாக சாலை, நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருக்கும் பொருள், மேற்கூரையை சம்பந்தப்பட்டவர்கள் தாங்களாகவே அகற்றிட வேண்டும். தவறும் பட்சத்தில் மாநகராட்சி மூலம் அகற்றப்படும். ஆக்கிரமிப்பில் உள்ள பொருட்கள் திரும்ப வழங்கப்பட மாட்டாது. ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கான செலவு தொகையையும் செலுத்த நேரிடும். தொழில் நிறுவன உரிமையாளர்கள் விளம்பர பதாகைகளை, தனது கடை கட்டடத்துக்கு உட்பட்ட இடத்தில் வைக்க வேண்டும். போக்குவரத்துக்கு இடையூறாக பொது இடத்தில் நீட்டி கொண்டிருக்கும் வகையில் வைக்க கூடாது. குறிப்பிட்ட அளவிற்கு மேல், விளம்பர பதாகை வைக்கப்பட்டால், மாநகராட்சியிடம் உரிய அனுமதி, அதற்குரிய கட்டணத்தை செலுத்த வேண்டும். மாநகராட்சி பகுதிகளில் வீடுகளுக்கு முன்பாக சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள கான்கீரிட் சாய்வுதளங்களை தாமாகவே முன்வந்து அப்புறப்படுத்த வேண்டும். கட்டுமானம் மற்றும் கட்டட பராமரிப்பு பணி செய்வோரும் கட்டட இடிபாடு, கட்டுமான பொருள்களை, மக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக அல்லது கழிவுநீர் கால்வாய்களில் கொட்டினால் அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.துணை கமிஷனர் தனலட்சுமி பேசியதாவது: தொழில் வரியை முறையாக செலுத்த வேண்டும். இதேபோல் டிரேட் லைசன்ஸ் பெற்றிருக்க வேண்டும். வரி வருவாய் மாநகராட்சி பகுதி வளர்ச்சி பணிக்கு தான் பயன்படுத்தப்படுகிறது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். கடைகளில் இருந்து குப்பையை வெளியே தள்ளி விட கூடாது. மாநகராட்சி குப்பை வண்டிகளில் குப்பையை போட வேண்டும். மாவட்டம் குறித்து பெருமை பேசுகின்றனர். ஆனால் இம்மாவட்டத்தில் தான் ஜாதி பாகுபாடு அதிகளவில் பார்க்கப்படுகிறது. இது வேதனையாக உள்ளது. ஆர்.கே.வி.சாலையில் நேதாஜி வணிக வளாகத்தில் சினிமா தியேட்டர், கனி மார்க்கெட்டில் புட் கோர்ட் அமைக்கப்படும். தியேட்டர், ஹோட்டல் வைக்க தயாராக இருப்பவர்கள் அணுகலாம். இதேபோல் காளைமாட்டு சிலை அருகேயுள்ள வணிக வளாகத்தை முழுமையாக பயன்படுத்துவது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சாலையோர தள்ளுவண்டி கடைகள் குறித்து கணக்கீடு செய்யப்படும். தள்ளுவண்டி கடைக்காரர்கள் மீது ஆக்கிரமிப்பு என நடவடிக்கை எடுக்க இயலாது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !