ஈரோடு : மருத்துவமனையின் அவலம் ஈரோடுகீழே விழும் நிலையில் உள்ள, ஈரோடு கால்நடை மருத்துவமனையை இடித்து, விரைவில் புதிய கட்டிடம் கட்ட வேண்டும். ஈரோட்டில் உள்ள கால்நடை பெரு மருத்துவமனை 1915ல் திறக்கப்பட்டது. 1981ல் தரம் உயர்த்தப்பட்டது. இந்த வளாகத்தில் கால்நடை மண்டல இணை இயக்குநர் அலுவலகம், துணை இயக்குநர் அலுவலகம், நோய் புலனாய்வு பிரிவு, கோழி நோய் ஆராய்ச்சிக் கூடம், உதவி இயக்குநர் அலுவலகம், கால்நடை பெரு மருத்துவமனை ஆகியவை உள்ளன. கால்நடை பெரு மருத்துவமனை வளாகத்தில், கால்நடைகளின் உள் மற்றும் வெளி நோயாளிகள் சிகிச்சை கூடம், பண்டக வைப்பறை ஆகியவை உள்ளன. மாவட்ட அளவில், பசு, எருமை, நாய், ஆடு, கோழி, பூனை, குதிரை என, 200க்கும் மேற்பட்டவை சிகிச்சைக்கு வருகின்றன. கால்நடைகளுக்கு சிகிச்சை பணி, ஆடு, பசு, எருமை ஆகியவற்றுக்கு கரூவூட்டல், சினை பரிசோதனை ஆகிய சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. மாடுகளுக்கு சப்பைநோய், வெக்கை நோய், தொண்டை அடைப்பான், கோமாரி நோய் ஆகியவற்றுக்கான தடுப்பூசி அளிக்கப்படுகிறது. கோழிகளுக்கு இராணிகட், புறஅம்மை, கோழி அம்மை தடுப்பூசி போடப்படுகிறது. கால்நடை பெரு மருத்துவமனையில் உள்ள பிரதம மருத்துவமனை வளாகத்தின் உட்பகுதி மற்றும் மாடியில் உள்ள அறைகள் முழுவதும் பழுதடைந்து கீழே விழ காத்திருக்கின்றன. மேல் தளம் மற்றும் கீழ் தளத்தின் கூரை அபாய நிலையில் உள்ளது. மருத்துவமனையின் பின்பகுதியில் முட்புதர் மண்டிக் கிடக்கிறது. பழைய கட்டிடத்தின் ஆயுட்காலம் முடிவடைந்ததால், டாக்டர்கள் மரத்தடியில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கின்றனர். மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அரங்கமின்றி, கால்நடைகளுக்கு வெட்டவெளியில் வைத்து, டாக்டர்கள் அறுவை சிகிச்சை மேற்கொள்கின்றனர். இவ்வாறு அறுவை சிகிச்சை மேற்கொள்ளும்போது சில சமயங்களில் கால்நடைகள் இறந்து விடுகின்றன. முறையான அடிப்படை வசதி இல்லாததால், டாக்டர்களும் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். கால்நடைகளுக்கு உயிர்நாடியாக விளங்கும் இம்மருத்துவமனையை, இடித்து புதிய கட்டிடம் அமைக்க, மத்திய அரசு 14.90 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. பழைய கட்டிடத்தை இடித்து, புதிய கட்டிடம் அமைக்க நிதி ஒதுக்கீடு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், கட்டமைப்பு பணி கிடப்பில் கிடக்கிறது. கூடுதல் நிதி ஒதுக்கீடு பெற்று, விரைவில் புதிய கட்டிடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.