உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நிலத்தை அபகரித்தால் என்ன தண்டனை தெரியுமா? பறைசாற்றும் திப்பு சுல்தானின் செப்பு பட்டயம்

நிலத்தை அபகரித்தால் என்ன தண்டனை தெரியுமா? பறைசாற்றும் திப்பு சுல்தானின் செப்பு பட்டயம்

ஈரோடு, ஈரோடு சி.என்.கல்லுாரி அருகில், சில மாதங்களுக்கு முன், ஒரு நிகழ்ச்சிக்காக நிலத்தை தோண்டியபோது, பண்டைய கால செப்பு பட்டயம் கிடைத்தது. ஈரோடு வ.உ.சி., பூங்கா எதிரில் செயல்படும் அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டது. அதில் குறிப்பிடப்பட்டிருந்த, 74 பதிவுகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அதில் குறிப்பிடப்பட்டிருந்த தகவல் வருமாறு: கடந்த, 1796ல் திப்பு சுல்தான் ஆட்சியின் போது, விஜயமங்கலம் பகுதியில் இடங்கை, வலங்கை என்ற இரு பிரிவு இருந்தது. இங்குள்ள மாரியம்மன் திருவிழாவின்போது, இடங்கையாரின் நிலத்தை, வலங்கை பிரிவை சேர்ந்த கவறை பெத்திசெட்டி, தனது நிலம் எனக்கூறி மூன்று மாதங்கள் பயன்படுத்தி உள்ளார். அதற்காக பஞ்சாயத்துக்கு, 1,500 பொன் செலுத்தியுள்ளார். இந்த பிரச்னை குறித்த சீர்மை விசாரணை, திப்பு சுல்தான் பிரதிநிதி மீரு சாயிபு முன்னிலையில் நடந்தது. இதேபோல் ஏற்கெனவே காஞ்சிபுரத்தில் நடந்த விசாரணையின் போது வழங்கப்பட்ட தீர்ப்பின் பட்டயங்களை எடுத்து வரச்சொல்லி பார்த்துள்ளார். இதை தொடர்ந்து கவறை பெத்திசெட்டியை கைது செய்ய உத்தரவிட்டும், 1,200 பொன் அபராதமும் விதித்துள்ளார். கவறை பெத்திசெட்டியிடம் எழுதி வாங்கி, இடங்கையாரின் வெற்றி பட்டயமாக வைத்து கொள்ளவும் உத்தரவிட்டார். இவ்வாறு பட்டயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதுகுறித்து அருங்காட்சியக காப்பாட்சியர் ஜென்ஸி கூறியதாவது:இன்றைய ஈரோடு மாவட்டத்தை திப்பு சுல்தான் ஆட்சி செய்திருப்பது இந்த பட்டயம் மூலம் தெரிய வருகிறது. பட்டயத்தின் மேல்புறம், நான்கு கைகளுடன் மாரியம்மன் நின்ற கோட்டுருவமும், இருபுறமும் சூரிய, சந்திரர்கள் உள்ளனர். திப்பு சுல்தான் பெயருடன் அவரது தந்தை ஹைதர் அலி பெயரும் இந்த பட்டயத்தில் இடம் பெற்றுள்ளது. இதே விசாரணை, தீர்ப்பை குறிப்பிடும் விரிவான ஒரு ஓலைப்பட்டயம், ஈரோடு கலைமகள் பள்ளி அருங்காட்சியகத்தில் உள்ளது. இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை