ஈரோட்டில் கிரிக்கெட் போட்டி 4வது மண்டலம் சாம்பியன்
ஈரோடு:தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, ஈரோடு மாநகராட்சி சார்பில் நடந்த கிரிக்கெட் போட்டியில், 4வது மண்டல அதிகாரிகள் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, ஈரோடு மாநகராட்சி சார்பில் முதல் முறையாக கிரிக்கெட் போட்டி நேற்று பெரிய சடையம்பாளையத்தில் உள்ள மைதானத்தில் நடந்தது. இதில், மாநகராட்சியில் உள்ள 4 மண்டல அணிகள் கலந்து கொண்டன. போட்டியை துணை கமிஷனர் தனலட்சுமி தொடங்கி வைத்தார். 1வது மண்டல தலைவர் பழனிசாமி, தி.மு.க கவுன்சிலர் கோகிலவாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இறுதிப்போட்டியில், 1வது மண்டல அதிகாரிகள்-பணியாளர்கள் அணியும், 4வது மண்டல அதிகாரிகள்-பணியாளர்கள் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த 1வது மண்டல அணி, 8 ஓவர்களுக்கு, 5 விக்கெட்டுகளை இழந்து, 60 ரன்களை எடுத்தது. பின்னர் பேட்டிங் செய்த, 4வது மண்டல அணி, 6.3 ஓவர்களில், 4 விக்கெட்டுக்கு 61 ரன்கள் எடுத்து சாம்பியன் பட்டத்தை வென்றது.