ஈரோடு : மாநிலங்களுக்கான பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 30 ஜாதிகளை சேர்ப்பதற்கான ஆலோசனை கூட்டம், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் சார்பில், வரும் 5, 6ம் தேதி சென்னையில் நடக்கிறது.மாவட்ட கலெக்டர் காமராஜ் அறிக்கை: தேசிய பிற்பட்டோர் ஆணையச் சட்டம் எண்- 27/1993, பிரிவு 9(1)ன் கீழ், குடிமக்களின் எந்த பிரிவினரையும், மத்திய அரசின் பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் சேர்க்க கோரும் கோரிக்கைகள் குறித்து பிற்படுத்தபட்டோர் ஆணையம் ஆய்வு செய்யும். மேற்குறிப்பிட்ட பட்டியலில் எந்தவொரு வகுப்பும் கூடுதலாக சேர்க்கப்பட்டது அல்லது சேர்க்கப்படாமல் விடுபட்டது தொடர்பான புகார்கள் குறித்து விசாரணை செய்து, அது சரியானது என்று கருதும் ஆலோசனையை, மத்திய அரசுக்கு, தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் வழங்கும்.
ஆணையத் தலைவர் ராவ், உறுப்பினர்கள் கார்வேந்தன், ஷகில் உஸ் ஜமான் அன்சாரி ஆகியோர் அடங்கிய ஆணையம், கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஜாதிகள், வகுப்புகள், உட்பிரிவுகள், ஒத்த பிரிவுகளை மாநிலத்துக்கான மத்திய பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க, 'சென்னை, 735-அண்ணாசாலை, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (டாப்செட்கோ)' அலுவலகத்தில், வரும் 5, 6ம் தேதி பொது விசாரணை நடத்த உள்ளது.
வரும் 5ம் தேதி காலை 10 மணிக்கு, பாண்டிய வெள்ளாளர், சேரகுல வெள்ளாளர், வல்லநாட்டு செட்டியார், லத்தீன் கத்தோலிக்க கிறிஸ்தவ வண்ணார் (கன்னியாகுமரி மாவட்டத்தில்), தொரையர் (சமவெளி), சத்திரியநாயுடு, எர்ர கொல்லர் (தொட்டிய நாயக்கர் வகுப்பின் உட்பிரிவாக), ரெட்டி (கஞ்சம்), கணியாள வெள்ளாளர், ஓ.பி.எஸ்., வெள்ளாளர், பையூர் கோட்ட வெள்ளாளர், மூன்று மண்டை 84 ஊர் சோழிய வெள்ளாளர், குடிகார வெள்ளாளர், ஊற்று வளநாட்டு வெள்ளாளர், ஷேக் ஆகிய பிரிவினருக்கு நடக்கிறது.
வரும் 6ம் தேதி காலை 10 மணிக்கு, சையத், அன்சார், காசுக்கார செட்டியார், கற்பூர செட்டியார், அகரம் வெள்ளான் செட்டியார், சுந்தரம் செட்டி, உரிக்கார நாயக்கர், உக்கிரகுல சத்திரிய நாயக்கர், ஆயிர வைசியர், கொங்கு வைஷ்ணவா, சௌத்திரி, கன்னடிய நாயுடு, லிங்காயத், சேர்வை, ஆரிய வைஸ்யா ஆகிய பிரிவினருக்கு நடக்கிறது.மேற்குறிப்பிட்ட ஜாதிகள், உபஜாதிகள், வகுப்புகள் ஆகியவற்றை சேர்ந்த சங்கங்கள், அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் மேற்குறிப்பிட்ட திட்டத்தின் படி ஆணையத்தின் முன் ஆஜராகி, மேற்குறிப்பிட்டுள்ள ஜாதிகள், உப ஜாதிகள், வகுப்புகள் குறித்த தகவல்களை அளிக்கலாம்.