உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 119 வாகனங்களுக்கு ரூ.1.08 லட்சம் அபராதம் : ஈரோட்டில் ஒரே மாதத்தில் ஆர்.டி.ஓ., நடவடிக்கை

119 வாகனங்களுக்கு ரூ.1.08 லட்சம் அபராதம் : ஈரோட்டில் ஒரே மாதத்தில் ஆர்.டி.ஓ., நடவடிக்கை

ஈரோடு:வட்டார போக்குவரத்து அலுவலர் நடத்திய வாகன சோதனையில், ஒரு மாதத்தில் 119 வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. 'அனைத்து வாகனங்களின் நம்பர் பிளேட்களும் குறிப்பிட்ட அளவில், வர்ணத்தில், குறிப்பிட்ட எழுத்து அளவில் எழுத வேண்டும்' என, அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டு, செப்டம்பர் 1ம் தேதி முதல் செயல்படுத்தப்படுகிறது. இதை மீறி, நம்பர் பிளேட்களில் பெயர், படங்கள், ஓவியம், கட்சிக்கொடி, தலைவர் படங்கள், எச்சரிக்கை வாசகம், தத்துவங்கள் போன்றவை எழுதினால், அந்த வாகனத்தின் ஆர்.சி., புத்தகத்தை முடக்கி வைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவுக்கான விளம்பர பலகைகள் ஆர்.டி.ஓ., அலுவலகம் உள்பட ஈரோடு நகரின் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து நான்கு வாரமாக, ஈரோடு மண்டல போக்குவரத்து அதிகாரி செந்தில்வேலன் தலைமையில், இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் மற்றும் பலர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். மண்டல போக்குவரத்து அதிகாரி செந்தில்வேலன் கூறியதாவது: வாகன ஆய்வில், ஒரு கார், எட்டு டூவீலர்கள் சிக்கின. இதில், இரண்டு வாகனம் மட்டுமே நம்பர் பிளேட் விதிமுறையை மீறியதால், வாகன உரிமையாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளோம். நம்பர் பிளேட் உட்பட விதிமுறைகள் முழுமையாக கடைபிடித்தால் மட்டுமே எஃப்.சி., வழங்கப்படும். புதிதாக பதிவு எண் பெற வரும் அனைத்து வாகனங்களிலும், ஆர்.டி.ஓ., அலுவலகத்துக்கு வரும்போதே, 'டி.என்.33 ஏயூ' என எழுதி வந்தால் மட்டுமே, வாகன பதிவு எண் வழங்கப்படும். நாங்கள் புதிய பதிவு எண் வழங்கியதும், அந்த எண்ணையும் அதே வடிவில் நிரப்ப வேண்டும், என வலியுறுத்துகிறோம். இந்த விதியை நாங்கள் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அமல்படுத்துவதால், புதிய வாகனங்களில் முறையாக நம்பர் பிளேட் வைக்கப்பட்டுள்ளது.

நகர்ப்பகுதியில் உள்ள வாகனங்களில் நம்பர் பிளேட் விதிமுறை குறைவாக மீறப்படுகிறது. கிராமப்பகுதியில் உள்ளவர்கள்தான், அதிகமாக படம், எழுத்துக்களில் விதியை மீறி வைத்துள்ளனர். ஆகஸ்ட் மாதம் நடந்த பொதுவான வாகன தணிக்கையில் 1,050 வாகனம் தணிக்கை செய்யப்பட்டு, 40 ஆம்னி பஸ், 11 மினிபஸ், இரண்டு தனியார் கம்பெனி வாகனங்கள், ஆறு பள்ளி வாகனங்கள், 51 லாரி, ஆறு மேக்ஸிகேப், நான்கு கார், 10 டூரிஸ்ட் டாக்ஸி, 14 ஷேர் ஆட்டோ, பிற மாநில வாகனம் மூன்று என, 119 வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில், 29 ஆயிரத்து 720 ரூபாய் பல்வேறு வரியாகவும், அதிக பாரம் ஏற்றியது, லைசென்ஸ், இன்சூரன்ஸ் இன்றி வந்தது போன்றவற்றுக்கு 78 ஆயிரத்து 412 ரூபாய் என, ஒரு லட்சத்து 8,132 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார். வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் ராமலிங்கம் உடனிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ