வீரப்பன்சத்திரம் நகராட்சி அறிமுகம்: ஈரோடு மாநகரை ஒட்டியே அமைந்துள்ளது வீரப்பன்சத்திரம் நகராட்சி. 21 வார்டுகளை கொண்டது.எல்லை: தெப்பக்குளம், சிதம்பரனார் வீதி, சோழன் வீதி, நேருவீதி, பவானி ரோடு, காலிங்கராயன் வாய்க்கால், வாட்டர் ஆஃபீஸ் ரோடு, செங்கோட்டையன் நகர், மாரியம்மன்கோவில் வீதி, கக்கன் நகர், ஜீவாநகர், ராமமூர்த்தி நகர், மாநகராட்சி வார்டு 13,14, சின்னப்பா லே அவுட், கண்ணையன் வீதி, பெரியசேமூர் நகராட்சி எல்லை 18, 19 வார்டு, பாரதிதாசன் வீதி, துரைசாமிவீதி, திரு.வி.க.ரோடு, லால்பகதூர் வீதி, நசியனூர் ரோடு, வடக்கு காவல் நிலையம் எல்லை, நாராயண வலசு, பாலசுப்பிரமணிய நகர், சூரம்பட்டி நகராட்சி எல்லை, கணபதி நகர், போஸ்டல் நகர், சத்திரோடு, ஜான்சிநகர், பெரியவலசு, ஈ.வி.என்., ரோடு, பிரப் ரோடு. வரும் உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சியுடன் இணைகிறது.கட்சிகள் ஆதிக்கம்: 15 ஆண்டுகளாக தி.மு.க., கைவசம் உள்ளது. சிட்டிங் நகராட்சி தலைவராக தி.மு.க.,வை சேர்ந்த மல்லிகா நடராஜன் உள்ளார். 11 தி.மு.க., கவுன்சிலர்கள், ஐந்து அ.தி.மு.க., இரண்டு காங்கிரஸ், ஒரு தே.மு.தி.க., ஒரு சுயேச்சை கவுன்சிலர்கள் உள்ளனர்.உள்ளாட்சி தேர்தலில் எதிரொலிக்கப் போகும் பிரச்னைகள் பற்றி வீரப்பன்சத்திரம் நகராட்சி மக்கள் கூறியதாவது:செல்லம்மாள் (டீக்கடை உரிமையாளர்) சுந்தரம் வீதி: எங்கள் வீதியில், நகராட்சி சுகாதாரப் பணியாளர்கள் மாதம் ஒருமுறை மட்டுமே வந்து சாக்கடையை சுத்தம் செய்கின்றனர். இதுபற்றி கேட்டால், சாக்கடை கழிவை வீட்டின் முன் அப்படியே போட்டு விடுகின்றனர். இதற்கு பயந்து யாரும் கேட்பதே இல்லை.விஜயகுமார் (லேத் பட்டறை) பாரதிதாசன் வீதி: பாரதிதாசன் வீதியில் குப்பை எடுக்க 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே வருகின்றனர். கடும் துர்நாற்றம் அடிப்பதுடன், நாய்கள் காலையிலேயே கூட்டமாக கூடி, சண்டையிட்டு கொள்கின்றன. பாதாள சாக்கடைக்கு குழி தோண்டிதால், சாலைகள் அனைத்தையும் வீணடித்து விட்டனர்.கிருஷ்ணன் (தறித்தொழிலாளி) பெரியவலசு: எங்கள் பகுதியில் கொசு மருந்து அடித்து ஆறு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. சுற்று வட்டார பகுதியில், சாக்கடை, குப்பை அகற்றாததால், கொசுக்கடியால் மக்கள் பெரிதும் அவதியுறுகின்றனர். மெயின்ரோட்டில் உள்ள கடைகளில் நோட்டில் கையெழுத்து வாங்கி விட்டு, அப்படியே சென்று விடுகின்றனர். சாணார்காடு, பெரிய வலசு பகுதிகள், மேடான பகுதி என்பதால், குடிதண்ணீர் விடும்போது, மோட்டார் போட்டு பிடிக்கின்றனர். சில சமயங்களில் மோட்டார் மூலம் உறிஞ்சும்போது, குழாய் உடைப்பு ஏற்பட்டு, வரும் வழியில் உள்ள, சாக்கடை கழிவுநீரையும் இழுத்து வந்து விடுகிறது.சாந்தி (இல்லத்தலைவி) காமராஜ் நகர்: புதிதாக கான்கிரீட் ரோடு அமைத்தனர்; மக்கள் சந்தோஷப்பட்டோம். ஆனால், பின்னாலேயே வந்து, பாதாள சாக்கடை திட்டத்துக்கு புதிதாக போட்ட ரோட்டில் குழிதோண்டி, எந்த வாகனமும் செல்ல முடியாத அளவுக்கு செயதுவிட்டனர். பாதாள சாக்கடை பணிகள் முடிந்தும் ரோட்டை புதுப்பித்து தரவில்லை.பாட்டாயி பாட்டி காமராஜ் நகர்: எங்கள் பகுதியில் இரவு 12 மணி, 2 மணிக்குதான் குடிநீர் வழங்குகின்றனர். இவ்வாறு விடுவதால், மறுநாள் வேலைக்கு செல்லமுடியாத நிலை ஏற்படுகிறது. மழைக் காலத்தில் பாதாள சாக்கடைக்கு தோண்டிய குழியில், தண்ணீர் தேங்கி, சேறும் சகதியுமாக மாறி விடுகிறது. கொசுக்கடி அதிகமாக உள்ளது. கொசுக்கடியால், அடிக்கடி குழந்தைகளுக்கு காய்ச்சல் வருகிறது.நகராட்சி தலைவி மல்லிகா நடராஜ் கூறியதாவது:அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மூலம் 75 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டதில், முதல், ஐந்து வார்டுக்கு 30 லட்சம் ரூபாயில் குடிநீர் வழங்கப்பட்டது. நசியனூர் - பெருந்துறை ரோட்டுக்கு 20 லட்சம் ரூபாயில் இணைப்பு சாலை, வீரப்பன்சத்திரத்தில் ஐந்து லட்சம் ரூபாயில் சுடுகாடு மேம்பாடு, சம்பத்நகர், மாணிக்கம்பாளையத்தில் ஆகிய இரு இடங்களில் 10 லட்சம் ரூபாயில் பார்க், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழாக, எட்டு ஏக்கர் நிலம் கையகப்படுத்தி, உரம் தயாரிக்க முடிவுசெய்து, குப்பைகள் கொண்டு செல்ல சாலை, பாலம் கட்டி முடிக்கப்பட்டு விட்டது. விரைவில் உரம் உற்பத்தி துவங்கும். எம்.எல்.ஏ., நிதி மூலமாக 16வது வார்டில் சமுதாயக்கூடம், இரு அங்கன்வாடி கட்டிடம் கட்டப்பட்டது. ஐந்து ஆண்டுகளில் சாக்கடை, சாக்கடை பாலம் மட்டும் 80 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் குறைகளுக்கு பதில்:நகராட்சியில் 50 சுகாதார பணியாளர் உள்ளனர். இவர்களை பிரித்து, 21 வார்டுகளில் துப்புரவு பணி நடக்கிறது. 50க்கும் மேற்பட்ட தெருக்களுக்குள் குப்பை வண்டி செல்லாது. எனவே, ஊழியர்கள் வீடுகளுக்கு சென்று குப்பையை வாங்கி வருகின்றனர். குப்பையை சேகரிக்கவே, 11 மணி ஆகிவிடுகிறது. இதனால், மற்ற இடங்களுக்கு செல்ல முடிவதில்லை.கொசு மருந்து அடித்துக்கொண்டேதான் இருக்கின்றனர். பொதுமக்கள் குப்பையை சாக்கடையில் கொட்டுவதால், சாக்கடை தேங்கி, கொசு அதிகரிக்கிறது. பாதாள சாக்கடை திட்டம் நிறைவுபெற்றதும், ரோடுகளை புதுப்பிக்க ஐந்தரை கோடி ரூபாய் தேவையென திட்ட மதிப்பீடு அரசுக்கு அனுப்பியுள்ளோம்.தொழிலாளர்கள் பகலில் வேலை முடிந்து, இரவில் வீடு திரும்புவதால்தான், இரவில் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. எங்களிடம் உள்ள ஊழியர்களை கொண்டு, இதுநாள் வரையில் துப்புறவு பணிகளை செய்துவிட்டோம். இனி இப்பகுதி மாநகராட்சியின் கீழ் வருவதால், கூடுதலாக துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, சுகாதார பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம்.