கோபிசெட்டிபாளையம்:கீழ்பவானி பாசனத்தில் நெல் நடவுப்பணி தீவிரம்
அடைந்துள்ளது. கூலி மற்றும் உரம் விலை உயர்வால் விவசாயிகள்
பாதிக்கப்பட்டுள்ளனர்.பவானிசாகர் அணையில் இருந்து எல்.பி.பி., பாசனத்துக்கு ஆகஸ்ட் 15ம் தேதி
தண்ணீர் திறக்கப்பட்டது. அணையில் இருந்து வாய்க்காலில் 1,200 கன அடி
தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கோபி சுற்று வட்டாரத்தில் நாதிபாளையம்,
கடுக்காம்பாளையம், பொம்மநாய்க்கன்பாளையம், நாகதேவன்பாளையம், சந்திராபுரம்,
கூகலூர், வெள்ளாங்கோவில், அளுக்குளி, பொலவகாளிபாளையம், மொடச்சூர்,
கோட்டுபுள்ளாம்பாளையம், குள்ளம்பாளையம், வெள்ளாளபாளையம் ஆகிய பகுதிகள்,
எல்.பி.பி., பாசனம் பெறுகிறது. இப்பகுதியில் 30 ஆயிரம் ஏக்கரில் நெல் நடவு
செய்யப்படுகிறது. வாய்க்காலில் இருந்து கொப்பு வாய்க்காலில் தண்ணீரை
பயன்படுத்தி, ஒரு மாதத்துக்கு முன் நெல் நாற்று விடும் பணி தீவிரமாக
நடந்தது. ஏ.எஸ்.டி., ஏ.டி.டி.,-45, ஏ.டி.டி.,39, ஏ.டி.டி., 38,
பி.பி.டி.,5204 (டீலக்ஸ் பொன்னி), ஐ.ஆர்.20, கோ.43 மற்றும் குண்டு ரக போன்ற
ரக நாற்று விடப்பட்டன.ஒரு மாதமாக உழவு, சமன்படுத்துதல் போன்ற பணிகள்
நடந்தன. நாற்றுகள் நடவு தன்மைக்கு வந்துள்ளதால், பாசனப்பகுதியில் நெல்
நாற்று நடவு பணி தீவிரமாக நடக்கிறது. உரம் விலை உயர்வு, உழவுப் பணிக்கான
கூலி, நடவு கூலி ஆகியவை உயர்ந்துள்ளதால் விவசாயிகள்
பாதிக்கப்பட்டுள்ளனர்.விவசாயிகள் சிலர் கூறியதாவது:எல்.பி.பி.,
வாய்க்காலில் இருந்து கொப்பு வாய்க்காலில் வரும் தண்ணீரை பயன்படுத்தி நெல்
நடவு பணியை துவங்கி உள்ளோம். சென்ற ஒரு மாதத்துக்கு முன் நெல் நாற்று
மற்றும உழவு பணி செய்தோம். நாற்று நன்கு முற்றிய நிலையில் உள்ளதால் நடவு
பணியை துவங்கி உள்ளோம்.எல்.பி.பி., பாசனத்தில் ஏ.எஸ்.டி., ஏ.டி.டி., உள்ளிட்ட ரகம் அதிகளவில்
பயிரிடப்படுகிறது. நெல் விதைகள் ஏ.எஸ்.டி., ஒரு கிலோ 25 ரூபாய்,
ஏ.டி.டி.,-45 ஒரு கிலோ 24 ரூபாய், ஏ.டி.டி.,39 ஒரு கிலோ 24 ரூபாய்,
ஏ.டி.டி., 38 ஒரு கிலோ 23 ரூபாய், பி.பி.டி.,5204 (டீலக்ஸ் பொன்னி) ஒரு
கிலோ 26 ரூபாய், ஐ.ஆர்.20 ஒரு கிலோ 24 ரூபாய், கோ.43 ஒரு கிலோ 23 ரூபாய்,
குண்டு ரகம் ஒரு கிலோ 11 ரூபாய் வாங்கி வந்து, நாற்று விட்டோம்.சென்றாண்டு
இயந்திரம் மூலம் உழவு செய்ய 750 ரூபாய், பெண்களுக்கு கூலி 100 ரூபாய்
கொடுத்தோம். உரம் மூட்டை 430 ரூபாய்க்கு வாங்கினோம். ஆனால், நடப்பாண்டு
உழவுப் பணிக்கு ஏக்கருக்கு 1,000 ரூபாயும், நாற்று நடவு செய்ய ஒரு
பெண்ணுக்கு 130 ரூபாய் கூலி தருகிறோம். கலப்பு உரங்கள் 17க்கு 17 மூட்டை
540 ரூபாய், 20க்கு 20 உரம் 650 ரூபாய்க்கு விற்கிறது.கூலி உயர்வு, உரம் விலை உயர்வால் நெல் நடவு செலவு 20 சதவீதம் வரை
அதிகரித்து விட்டது. ஆனால், நெல் கொள்முதல் நிலையங்களில் சென்றாண்டு போலவே
சன்னரகத்துக்கு 11 ரூபாய், குண்டு ரகத்துக்கு 10.50 ரூபாய் மட்டுமே
தருகின்றனர். நெல் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.