உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பருத்தி, நூல் விலை மீண்டும் உயர்வு

பருத்தி, நூல் விலை மீண்டும் உயர்வு

ஈரோடு: சில மாதங்களாக குறைந்து வந்த பருத்தி விலை மீண்டும் உயர்வதால், நூல் விலையும் தாறுமாறாக உயர்ந்துள்ளது.நடப்பாண்டு பருத்தி விளைச்சல் குறைந்ததன் காரணமாக, உள்நாட்டில் கடும் தட்டுப்பாடு நிலவியது. எனினும், வெளிநாடுகளுக்கு பருத்தி ஏற்றுமதியால், உள்நாட்டில் பருத்தி தேவை அதிகரித்தது.இதன் காரணமாக பருத்தி குவிண்டால் விலை 70 ஆயிரம் ரூபாய்க்கு மேல் தாறுமாறாக உயர்ந்தது.விலை உயர்வை கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் ஜவுளி உற்பத்தியாளர்கள், வணிகர்கள் இணைந்து கடையடைப்பு, உண்ணாவிரதப் போராட்டம் என வலுப்பெற்றது. மத்திய அரசு தலையிட்டு பருத்தி ஏற்றுமதிக்கு தடை விதித்தது.உள்நாட்டுத் தேவைக்கு ஏற்ப பருத்தி தேக்கமடைந்ததால், விலையும் நாளடைவில் சரியத் துவங்கியது. 70 ஆயிரம் ரூபாய்க்கு விற்ற பருத்தி, கடந்த மாதம் 28 ஆயிரம் ரூபாய் வரை விலை சரிந்தது. இதன் எதிரொலியாக, ஜவுளி ஆடைகள் விலை உயர்வும் குறைந்தது.கடந்த சில மாதங்களாக திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் சுற்றுச்சூழல் பிரச்னையால், சாயப்பட்டறைகள் தொடர்ந்து மூடப்பட்டன. நூற்பாலைகள், விசைத்தறியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். தற்போதுதான், இயங்கத் துவங்கியுள்ளன.பண்டிகை சீஸன் நெருங்கி வருவதை அடுத்து, உள்நாட்டில் பருத்தி தேவை அதிகரித்துள்ளது. பருத்தி உற்பத்தி குறைந்துள்ள நிலையில், தேவை அதிகரிப்பால் மீண்டும் விலை திடீரென உயர்ந்து வருகிறது. தற்போது, பருத்தி குவிண்டால் 40 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளதால், நூல் மற்றும் ஜவுளி துணி விலையும் அதிகரித்துள்ளது.ஈரோடு நூல் ஏஜன்ட் சங்கர் கூறியதாவது:திருப்பூர், ஈரோடு, கரூர் மற்றும் கோவை ஆகிய பகுதிகளில் 'வெஃப்ட்' நூல்களான 40ம் நம்பர், 30ம் நம்பர், 34ம் நம்பர், 42ம் நம்பர், 10ம் நம்பர் ஆகியவை பின்னலாடைகள் மற்றும் ஜவுளி துணி உற்பத்திக்கு அதிகம் பயன்படுகிறது.தற்போது, மில்களில் ஜவுளி உற்பத்தி ஜரூராக துவங்கி உள்ள நிலையில், பருத்தி தேவை அதிகரித்துள்ளது.இதன் காரணமாக, நூல் விலை 50 கிலோ கொண்ட பை, 1,000 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. கடந்த மாதம் 40ம் நம்பர் 4.075 ரூபாயாக இருந்தது; 8,000 ரூபாயாகவும்,30ம் நம்பர் 6,500 ரூபாயாக இருந்தது; 7,900 ரூபாயாகவும், 34ம் நம்பர் 6,300 ரூபாயாக இருந்தது; 7,700 ரூபாயாகவும், 42ம் நம்பர் 8,100 ரூபாயாக இருந்தது; 9,200ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. மேலும், விலை உயர வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.ஈரோடு ஜவுளி வர்த்தகர் செல்வராஜ் கூறுகையில், ''பருத்தி மற்றும் நூல் விலை உயர்வு காரணமாக, காட்டன் ஆடைகள் விலையும் 20 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இதில், பின்னலாடைகளான பனியன் துணி டஜனுக்கு 20 ரூபாய் அதிகரித்துள்ளது. லுங்கி, வேட்டி உள்பட காட்டன் துணிகள் விலை மீட்டருக்கு 15 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. கடந்த சில மாதங்களாக துணி விலையை குறைக்க வேண்டும் என மொத்த வியாபாரிகள் எங்களிடம் நச்சரித்தனர். மீண்டும் விலை உயர்ந்துள்ளதால், ஜவுளி விற்பனை குறைய வாய்ப்புள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !