கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ குழு ஈரோடு மாவட்ட விவசாயிகள் எதிர்பார்ப்பு
ஈரோடு: நோய்களால் கால்நடை உயிரிழப்பை தடுக்க, சிறப்பு மருத்துவ குழு அமைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, விவசாயிகளிடம் எழுந்துள்ளது.ஈரோடு மாவட்டத்தில் முன்பு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் மூலம், விவசாயிகள் தகவல் தெரிவித்தால், கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க டாக்டர்கள் வந்தனர். தற்போது அந்த நடைமுறை இல்லை. நோய், சினை பார்த்தல், ஊசி போடுதல், நஞ்சு எடுத்தலுக்கு, மருத்துவ நிலையம் அல்லது தனியார் மருத்துவர்களிடம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இரவில் கால்நடைகள் நோய்களால் பாதிக்கப்படும்போது, மருத்துவ உதவி கிடைக்காமல் உயிரிழப்பு ஏற்படுகிறது.கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை தேவைப்படும்போது, ஆவின் மருத்துவர் அல்லது கால்நடை பராமரிப்பு துறை மருத்துவர் வந்து சிகிச்சை அளிக்க வேண்டும். குறிப்பாக இரவிலும், பிரசவ காலங்களிலும் கால்நடைகளை காக்க, ஒரு மருத்துவ குழுவை அமைத்து, அதன் தொடர்பு எண்ணை அறிவிக்க வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:ஈரோடு ஆவினை பொறுத்தவரை சுழற்சி முறையில் மருத்துவர்களை அனுப்பி சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர்கள் தரும் தகவல் பால் உற்பத்தியாளர் சங்கங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு விவசாயிகளை சென்றடைகிறது. இதர காலங்களில், கால்நடை பராமரிப்பு துறை மையங்களுக்கு அழைத்து சென்று சிகிச்சை பெற்று வருகிறோம். அவசர காலங்களில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ குழு, ஆம்புலன்ஸ் வசதியும் செய்து தர வேண்டும். இப்போது எட்டு ஆம்புலன்ஸ்கள் உள்ளன. இதை ஒவ்வொரு வட்டாரத்துக்கும் வழங்க வேண்டும். தவிர ஆம்புலன்ஸ் சேவை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு கூறினர். இதுகுறித்து கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் கூறியதாவது:மாவட்டத்தில் தொலைதுார கிராமங்களில் உள்ள கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் வகையில் ஈரோடு மற்றும் கோபி கால்நடை பன்முக மருத்துவமனைகள், மொடக்குறிச்சி, பவானி, தாளவாடி, அந்தியூர், பெருந்துறை, சென்னிமலை, கொடுமுடி கரட்டாம்பாளையம் கால்நடை மருத்துவமனைகள் என எட்டு நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகள் செயல்பாட்டில் உள்ளன. இதன் மூலம் கால்நடைகளுக்கு இலவச சிகிச்சை மேற்கொள்ளப்படும். அவசர சிகிச்சைக்கு, 1962 என்ற தொலைபேசி எண்ணில் தகவல் தரலாம். இவ்வாறு கூறினர்.