உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஆவின் கலப்பு தீவன விலையை குறைக்க விவசாயிகள் வலியுறுத்தல்

ஆவின் கலப்பு தீவன விலையை குறைக்க விவசாயிகள் வலியுறுத்தல்

ஈரோடு:ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் வேளாண் குறைதீர் நாள் கூட்டம் டி.ஆர்.ஓ., சாந்தகுமார் முன்னிலையில் நடந்தது.இதில் விவசாய சங்க நிர்வாகிகள் பேசியதாவது: கீழ்பவானி பாசனத்துக்காக அணையில் தண்ணீர் குறைவாக உள்ளது. ஆயக்கட்டு அல்லாத, மோட்டார் வைத்து உறிஞ்சப்படும் நீரேற்றங்களுக்கு தண்ணீர் வழங்கும் மின் இணைப்பை நிறுத்துங்கள். அணை நீர் மட்டம் அதிகரித்த பின், வழங்கலாம். தென்னை பயிரில் வாடல் நோயும், வெள்ளை ஈ தாக்குதலும் அதிகரித்துள்ளதால், விவசாயிகள் பாதிக்கின்றனர். கரும்புக்கான கொள்முதல் விலையை மாநில அரசு அறிவித்து செயல்படுத்த வேண்டும். ஆவின் கலப்பு தீவன விலையை குறைக்க வேண்டும். தரமாகவும் இல்லை. நஞ்சனாபுரம் கிளை வாய்க்காலில் சாலை அமைக்கும் பணிக்கு இடையூறாக உள்ள மின் கம்பங்களை மாற்றி அமைக்க வேண்டும். டி.என்.பாளையம் உட்பட பல பகுதியில் ஆயக்கட்டு பாசன நிலப்பகுதியில் வீடு, வணிக பயன்பாட்டுக்கான கட்டட அனுமதி, மின் இணைப்பு வழங்கக்கூடாது. இதனால் நீர் வழிப்பாதை, வயல்களுக்கு செல்லும் பாதை, பணிகள் பாதிக்கும். உழவன் மஞ்சள் மண்டியில் வைக்கப்பட்டு, 1,350 மூட்டை மஞ்சள் திருட்டு போய், வழக்குப்பதிவு செய்தும் நடவடிக்கை இல்லை. இவ்வாறு அவர்கள் பேசினர்.பதில் அளித்து அதிகாரிகள் பேசியதாவது: பொள்ளாச்சி பகுதியில் தென்னையில் வாடல் உள்ளது. நமது பகுதியில் இல்லை. அவ்வாறு இருந்தால், நடவடிக்கை எடுக்கலாம். ஆவின் கலப்பு தீவனம், பல்வேறு கலப்பு பொருட்களுடன் விற்பனைக்கு வந்ததால் விலை அதிகமாக உள்ளது. தரமாக வழங்க நடவடிக்கை எடுக்கிறோம். ஆயக்கட்டு பகுதிக்குள் வீடு, வணிக மின் இணைப்பு வழங்கக்கூடாது என விதி இல்லை. அதனால் வழங்குகிறோம். ஆற்றில் நீர் உறிஞ்சுபவர்களுக்கு மின் இணைப்பு துண்டிப்பு செய்ய இயலாது. பாசனப்பகுதிக்கு நீரை குறைத்து, தேவையான அளவு நீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு பதில் அளித்து அதிகாரிகள் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்