சரக்கு ஆட்டோவில் பழங்களை வைத்து காலை முதல் இரவு வரை வியாபாரம்
ஈரோடு ஈரோடு காந்திஜி சாலையில், தீயணைப்பு நிலையம் எதிரே சாலையோரம் சரக்கு ஆட்டோவில் பழங்களை வைத்து காலை முதல் இரவு வரை வியாபாரம் நடக்கிறது. பழங்களை வாங்க வருவோர் டூவீலர், கார்களை சாலையில் கிடைத்த இடத்தில் நிறுத்தி செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் பீக் அவர்சில் வாகன நெரிசல் தவிர்க்க முடியாததாகி வருகிறது. இதை சூரம்பட்டி போலீசார் ஏனோ கண்டு கொள்வதில்லை. நாளுக்கு நாள் இந்த சாலையோரம் கடை போடுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதேபோல் ஈரோடு தெற்கு எல்.ஐ.சி., அலுவலகம் அருகே சாலையோரம் சரக்கு ஆட்டோவில் பல ஆண்டாக பழக்கடை நடப்பதால், போக்குவரத்து நெரிசல், பாதிப்பு தொடர்கதையாக உள்ளது. இந்த கதைக்கு முடிவுரை எப்போது என்பதும், வாகன ஓட்டிகள் மற்றும் அப்பாவி மக்களின் கேள்வியாக உள்ளது.