சென்னம்பட்டி, கடம்பூரில் சூறாவளியுடன் கனமழை 1,000க்கும் மேற்பட்ட வாழை சேதம்-மரங்கள் முறிவு
அந்தியூர், வெள்ளித்திருப்பூர் அருகே சென்னம்பட்டி, கிட்டம்பட்டி, சனிச்சந்தை, ஜரத்தல், குருவரெட்டியூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று மாலை, 4:௦௦ மணியளவில், சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது.காற்றால் பாப்பாத்திக்காட்டுப்புதுார் வெத்தலைக்காரன் தோட்டத்தில், இந்திராணி என்பவரின் குடிசை வீட்டு கூரை துாக்கி வீசப்பட்டது. அதே பகுதியில் திருமுருகன் தோட்டத்தில், தென்னை மரங்கள், விஸ்வநாதன் தோட்டத்தில் மரவள்ளி கிழங்கு செடிகள் வேருடன் சாய்ந்தன.கதிர்வேல் தோட்டத்தில், 150 செவ்வாழை மரம், பெருமாள் என்பவர் தோட்டத்தில், 500 நேந்திரன் வாழை மரங்கள் என, சென்னம்பட்டி சுற்று வட்டாரத்தில் மட்டும், ௧,௦௦௦க்கும் மேற்பட்ட வாழைகள் முறிந்து சேதமடைந்தன.* கடம்பூர் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மதியம், 2:30 மணி முதல், 4:00 மணி வரை தொடர்ந்து இடைவெளி விட்டு சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இருட்டிபாளையம்-ஜீவா நகரில் காற்றை தாக்குப்பிடிக்க முடியாமல் இரண்டு இடங்களில் மரங்கள் முறிந்து, சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாலை, 5:00 மணியளவில் அப்பகுதி மக்கள் உதவியுடன் மரங்கள் அகற்றப்பட்டன.