| ADDED : ஜூன் 20, 2024 06:29 AM
பெருந்துறை : பெருந்துறை, கொங்கு பாலிடெக்னிக் கல்லுாரி, முதலாமாண்டு டிப்ளமோ வகுப்புகள் துவக்க விழா நேற்று நடந்தது.கொங்கு வேளாளர் கல்வி அறக்கட்டளை தலைவர் மருத்துவர் குமாரசுவாமி தலைமை வகித்தார். கொங்கு பாலிடெக்னிக் கல்லுாரி தாளாளர் வெங்கடாசலம் முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் வேதகிரி ஈஸ்வரன் பேசுகையில், ''நடந்து முடிந்த வாரியத் தேர்வில் முதலாமாண்டில், 14 மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் 'ஓ' கிரேடு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இரண்டாமாண்டில் சி.சி.என். துறை மாணவி சார்மிளா, 700க்கு 693 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மூன்றாமாண்டில் கம்ப்யூட்டர் துறை மாணவர் கவின் மற்றும் ஐ அண்டு சி துறை மாணவர் விக்னேஸ்ராஜ் ஆகியோர் 600க்கு 593 மதிப்பெண்கள் பெற்று கல்லுாரிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.மேலும், கடந்த கல்வியாண்டில் வளாகத் தேர்வு மூலமாக, 262 மாணவர்கள், 23 தொழிற்சாலைகளுக்கு தேர்தெடுக்கப்பட்டு, அதிகபட்ச ஊதியமாக ஆண்டுக்கு,ரூ.7.20 லட்சம் வரை பெற்றுள்ளனர். கொங்கு வேளாளர் கல்வி அறக்கட்டளை மூலம், 15 மாணவர்களுக்கு இலவச கல்வி, சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு உதவித் தொகையாக ரூ.22.55 லட்சம் வழங்கப்பட்டது,''என்றார்.திரைப்பட நடிகரும், இயக்குனரும், பட்டிமன்ற பேச்சாளருமான ராஜ்மோகன் ஆறுமுகம் சிறப்பாளராக பங்கேற்று, வாரியத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். அறக்கட்டளை உறுப்பினர்கள் முத்துசாமி, சச்சிதானந்தன் கலந்து கொண்டனர்.