| ADDED : மே 25, 2024 02:48 AM
ஈரோடு: லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணும் பணியில் ஈடுபடும் கண்காணிப்பாளர், உதவியாளர், நுண் பார்வையாளர் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த முதற்கட்ட பயிற்சி, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் டி.ஆர்.ஓ., சாந்தகுமார் பேசியதாவது: ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் தலா, 14 மேஜை வீதம், 6 சட்டசபை தொகுதிகளுக்கும், 84 மேஜைகளில், 17 முதல், 22 சுற்று ஓட்டு எண்ணப்பட உள்ளது. இதற்காக, 84 கண்காணிப்பாளர், 84 உதவியாளர், 84 நுண் பார்வையாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். தபால் ஓட்டு ஒன்பது சுற்றுகளாக எண்ணப்படும். ஓட்டு எண்ணும் நாளில் கண்காணிப்பாளர், உதவியாளர், நுண் பார்வையாளர்களுக்கு காலை, 5:00 மணிக்கு சம்மந்தப்பட்ட சட்டசபை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மூலம், பணி நியமன ஆணை வழங்கப்படும். காலை, 6:00 மணிக்கு ஓட்டு எண்ணும் மையங்களில் ஆஜராக வேண்டும். தங்களுக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதா என சரி பார்க்க வேண்டும். இவ்வாறு பேசினார். இதை தொடர்ந்து ஓட்டு எண்ணுவது தொடர்பான பயிற்சி வழங்கப்பட்டது.கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ரகுநாதன், (வளர்ச்சி) செல்வராஜ், தேர்தல் தாசில்தார் சிவசங்கர், உதவி திட்ட அலுவலர் மகேஸ்வரி உட்பட பலர் பங்கேற்றனர்.