| ADDED : பிப் 15, 2024 11:00 AM
சென்னிமலை: சென்னிமலை, முருகன் கோவிலுக்கு, தமிழகம் முழுவதும் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். வாரம் தோறும் செவ்வாய்கிழமை, சஷ்டி, கிருத்திகை, அமாவாசை உள்ளிட்ட விழா காலங்களில் அதிகளவில் பக்தர்கள் வந்து, முருகப்பெருமானை வணங்கி செல்வதுடன் நன்கொடைகளை வழங்கி வருகின்றனர்.திருவிழா நேரத்தில் வரிசையில் காத்திருந்து, நன்கொடைகள் வழங்கவும், அன்னதானத்திற்கு தனியாகவும், திருப்பணிகளுக்கு தனியாகவும், வேண்டுதல் செய்ய பொது நன்கொடை தனியாகவும் செலுத்துவதில் பக்தர்களுக்கு சிரமம் இருந்து வருகிறது. மேலும் ரசீது பெறுவதில் கூடுதல் காலதாமதம் ஏற்படுகிறது. இதை தவிர்க்கவும், பக்தர்கள் சிரமம் இன்றி நன்கொடைகள் செலுத்த வசதியாக, 'கியூ ஆர் கோடு' வசதியை ஹிந்து சமய அறநிலையத்துறையினர் செய்துள்ளனர்.இது குறித்து, சென்னிமலை மலை மீது கோவில் வளாகத்தில் பிளக்ஸ் பேனர் வைத்துள்ளனர். மேலும் டிக்கெட் வழங்கும் கவுன்டரில் கியூ ஆர் கோடு ஸ்கேன் செய்ய வசதி செய்துள்ளனர். நன்கொடை செலுத்தும் பக்தர்களுக்கு அது குறித்த தகவல், ரசீது மொபைல் எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்ப வசதி செய்யப்பட்டுள்ளது.