தீபாவளி பண்டிகை ஆர்டர் அதிகரிப்பு பின்னலாடை உற்பத்தியாளர் மகிழ்ச்சி
திருப்பூர், தீபாவளி விற்பனை பண்டிகை கால ஆர்டர், கடந்த ஆண்டை காட்டிலும், 20 சதவீதம் அதிகரித்துள்ளதாக, திருப்பூர் உள்நாட்டு பின்னலாடை உற்பத்தியாளர்ள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.திருப்பூரின் ஒட்டுமொத்த உள்நாட்டு பின்னலாடை உற்பத்தி, ஆண்டுக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய்; அதில், தீபாவளி பண்டிகைக்கால ஆர்டர் மீதான உற்பத்தி மட்டும், 30 சதவீதம் அடங்கும். குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், ஆண்டு முழுவதும் உற்பத்தி செய்தாலும், தீபாவளி பண் டிகைக்கால ஆர்டர்களை மையப்படுத்தியே விற்பனை அதிகம் நடக்கும். அத்துடன், பொங்கல் பண்டிகை, தசரா பண்டிகை விற்பனை, ஓணம் பண்டிகை என, உள்நாட்டு பண்டிகை ஆர்டர்களும் கிடைக்கின்றன. தீபாவளிக்கு இன்னும் இரண்டு வாரமே உள்ளதால், கடைசி நேர விற்பனைக்கான ஆடைகள் மற்றும் உள்ளாடைகளை உற்பத்தி செய்து, 12ம் தேதிக்குள் கைக்கு கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக உற்பத்தியாளர் கூறுகின்றனர்.கடந்த மூன்று வார கால உற்பத்தியை ஒப்பிடும் போது, கடந்த ஆண்டை காட்டிலும், 15 முதல் 20 சதவீதம் வரை தீபாவளி ஆர்டர் வரத்து அதிகரித்துள்ளதாக, பனியன் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.