ஈங்கூர்: சென்னிமலை அடுத்துள்ள ஈங்கூரில், நேற்று தம்பிராட்டி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. சென்னிமலை, பெருந்துறை பிரதான ரோட்டில் ஈங்கூர் நகரின் கிழபுறம், கொங்கு வேளாள கவுண்டர் சமூகம் ஈஞ்சன் குல மக்களின் குலதெய்வமான, தம்பிராட்டி அம்மன் கோவில் அமைந்துள்ளது. நேற்று காலை கோவிலின் கும்பாபிஷேக விழா நடந்தது.இதற்கான பூஜைகள் கடந்த, 14ம் தேதி கணபதி ேஹாமத்துடன் தொடங்கி, நேற்று அதிகாலை வரை ஐந்து கால பூஜைகள் நிறைவு பெற்று, ஸ்ரீ விக்னேஸ்வர பூஜை, நாடி சந்தானம், ஆறாம் கால யாக பூஜை, கடம் புறப்பாடு ஆகியவை நடைபெற்றது. காலை, 6:30 மணிக்கு ராஜகோபுரம் கும்பாபிஷேகம் நடந்தது. 9:00 மணியளவில் அனைத்து கோபுரங்கள், விநாயகர், பரிவார தெய்வங்கள் மற்றும் தம்பிராட்டி அம்பிகைக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம் உட்பட கொங்கு மண்டலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழாவை குலகுரு கூனம்பட்டி கல்யாணபுரி ஆதீன ஸ்ரீ மாணிக்கவாசக மூலாம்லாய குருபீடம், 57வது ஜெகத்குரு ஸ்ரீமத் ராஜ சரவண மாணிக்கவாசக குரு சுவாமிகள் தலைமையேற்று நடத்தினார். விழாவில் பாசூர் பெரிய மடம் ஈஞ்சன்குல குரு தீஷீதர்கள் கௌமார மரபு தண்டபாணி சுவாமிகள், சிரவை ஆதீனம் இராமானந்த குமரகுருபர சுவாமிகள், ஹிந்து சமய அறநிலையத்துறை உயர் நிலைக்குழு உறுப்பினர் பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிவகிரி ஆதீன குரு பீடாதிபதி பண்டித குரு சுவாமிகள், சென்னிமலை முருகன் அடிமை சுப்புசாமி, அவிநாசி வாகீசர் மடாலயம் ஸ்ரீ காமாட்சிதாச சுவாமிகள் ஆகியோர் அருளாசி வழங்கினர்.விழா ஏற்பாடுகளை தம்பிராட்டி அம்மன் கோவில் நிர்வாக குழு தலைவர் சுப்பிமணியன், பொருளாளர் முருகசாமி, கோவில் திருப்பணி குழு தலைவர் ஸ்ரீ மகா ஈஸ்வரமூர்த்தி, செயலாளர் கணேசன், பொருளாளர் கந்தசாமி, அறக்கட்டளை தலைவர் ரங்கசாமி, செயலாளர் வெங்கடாச்சலம், பொருளாளர் பன்னீர் செல்வம் மற்றும் கோவில் நிர்வாக குழுவினர், ஈஞ்சன் குலப் பெருமக்கள் சிறப்பாக செய்திருந்தனர். கோவில் நிர்வாகம் சார்பாக கடந்த ஐந்து நாட்களாக அன்னதானம் வழங்கப்பட்டது. பெருந்துறை டி.எஸ்.பி., கோகுல்ராஜ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.