உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / போதையில் இருந்தவரிடம் ரூ.1.50 லட்சம் திருடியவர் கைது

போதையில் இருந்தவரிடம் ரூ.1.50 லட்சம் திருடியவர் கைது

புன்செய்புளியம்பட்டி:புன்செய்புளியம்பட்டி அருகே செல்லம்பாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார்,46. மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், கோவையில் வசித்து வருகிறார். கடந்த செப்., 9ம் தேதி கோவையில் தனக்கு சொந்தமான இடத்தை விற்பனை செய்த வகையில், 1.50 லட்சம் ரூபாயுடன், புன்செய் புளியம்பட்டிக்கு வந்துள்ளார். வீட்டிற்கு செல்லும் வழியில் ஏரங்கட்டும்பாளையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திய போது, அருகே இருந்த நபர்களுக்கும் மது வாங்கி கொடுத்துள்ளார். அப்போது அங்கிருந்த ஒருவர், செந்தில்குமார் பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த, 1.50 லட்சம் ரூபாயை எடுத்து சென்று விட்டதாக புன்செய் புளியம்பட்டி போலீசில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் பணத்தை திருடிய நபரை அப்பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த, 'சிசிடிவி' கேமரா பதிவின் அடிப்படையில் தேடி வந்தனர். இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமையிலான போலீசார் டானாபுதூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, ' சிசிடிவி' காட்சியில் பதிவான உருவ ஒற்றுமையுடன் இருந்தவரை பிடித்து விசாரித்தனர்.அவர், புன்செய் புளியம்பட்டி அருகே உள்ள வடுகபாளையத்தை சேர்ந்த அருண்குமார், 36, என தெரிந்தது. மேலும் விசாரணையில் போதையில் இருந்த செந்தில்குமார் பேண்ட் பாக்கெட்டில் இருந்து, 1.50 லட்சம் ரூபாய் திருடி சென்றதை ஒப்புக்கொண்டார். அருண்குமாரை கைது செய்த போலீசார், பணத்தை மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ