தகவல் தொழில்நுட்ப துறையில் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கில், மாநிலத்தில், இரண்டாம் மற்றும் மூன்றாம் தரத்தில் உள்ள நகரங்களில், 'மினி டைடல் பார்க்' அமைக்க, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டி நகராட்சி பகுதியில், திருப்பூர் - அவிநாசி மெயின் சாலையோரம், வருவாய்த்துறை வசமிருந்த, நிலம் தேர்வு செய்யப்பட்டது; அந்நிலம் டைடல் பார்க் நிர்வாகத்தின் வசம் ஒப்படைக்கப்பட்டது. '39 கோடி ரூபாய் செலவில், 7 அடுக்கு கட்டடமாக, மினி டைடல் பார்க் கட்டப்பட உள்ளது' என, தெரிவிக்கப்பட்டது.தேர்வு செய்யப்பட்ட இடம், பாறைக்குழியாக இருந்த நிலையில், சுற்றியுள்ள குடியிருப்புகள், பிற கட்டுமானங்களில் இருந்து வெளியேறிய கழிவுநீர், பாறைக்குழியில் குளமாக தேங்கியது. அந்நீரை, குடியிருப்புகளின் இடையே உள்ள வடிகால் வழியாக வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்பட, குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். பிரத்யேகமாக வடிகால் அமைத்து வெளியேற்றப்பட்டது.பாறைக்குழியில் மண் கொட்டி நிரப்பி, சமப்படுத்தி, அதன் மீது கட்டுமானப்பணி மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட பல சவால்கள் எழுந்தன; இதனால், கட்டுமானப்பணி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது.கட்டுமானத்தின் ஸ்திரத்தன்மை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்ற சூழலில், ஏற்கனவே, திட்டமிடப்பட்ட வடிவமைப்பில் மாற்றம் செய்வதென, டைடல் பார்க் நிர்வாகத்தினர் முடிவெடுத்து, வடிவமைப்பை மாற்றி கட்டுமானப்பணியை துவக்கினர்.நிலத்தடி, தரைதளம் உட்பட, 9 அடுக்கு கட்டடமாக வடிவமைப்பு மாற்றப்பட்டுள்ளது. 'கட்டுமானப்பணியை வரும், ஏப்., மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.