ரூ. 7 கோடியில் கட்டி பூட்டி கிடக்கும் அங்காடி எம்.எல்.ஏ., ஆய்வு; நகராட்சிக்கு எச்சரிக்கை
கோபி, கோபியில், ௭ கோடி ரூபாயில் கட்டப்பட்டு 5 மாதமாக பூட்டி கிடக்கும் அங்காடியை ஆய்வு செய்த எம்.எல்.ஏ., நகராட்சி நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுத்தார்.கோபி பெரியார் திடல் எதிரே, 6.99 கோடி ரூபாயில் கட்டப்பட்ட தினசரி அங்காடியை, 2024 டிச., 20ல், முதல்வர் ஸ்டாலின் வீடியோ கான்பரன்ஸில் திறந்து வைத்தார். 5 மாதமாகியும் பயன்பாட்டுக்கு வராமல் பூட்டிக்கிடக்கும் கட்டடத்தை, கோபி எம்.எல்.ஏ., செங்கோட்டையன் கட்சியினருடன் நேற்று காலை ஆய்வு செய்தார்.பிறகு அவர் கூறியதாவது: காய்கறி மார்க்கெட் கடைகளுக்கு படிக்கட்டு வழியாகத்தான் வரும் நிலை உள்ளது. காய்கறி சுமை துாக்கி வருவோர், 18 படிக்கட்டுகளில் ஏறி வருவது சுலபமான காரியமல்ல. அதேபோல் வெளிப்புற கடைகள் காற்றோட்டமாகவும், உட்புற கடைகள் காற்றோட்டமின்றி உள்ளது. கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் இதை கட்டமைக்க போட்ட மதிப்பீடு மற்றும் அளவீடுகளை மாற்றி கட்டியுள்ளனர். வாகனங்கள் உள்ளே வர சாய்தள வசதி, வாகனங்களை நிறுத்த பார்க்கிங் வசதி இல்லை.படிக்கட்டு வழியாக எப்படி வளாகத்துக்குள் காய்கறி எடுத்த வர முடியும் என்பதை நகராட்சி நிர்வாகம் சிந்திக்கவில்லை. இப்பிரச்னைக்கு நகராட்சி சேர்மேன் மற்றும் கமிஷனரே பொறுப்பேற்க வேண்டும். இப்பிரச்னைக்கு இரு மாதத்துக்குள் சரியான முடிவு எடுக்கவில்லையேல் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு எம்.எல்.ஏ., கூறினார்.