ஈரோடு: ஈரோட்டில் பட்டப்பகலில், மீன் வியாபாரியை மர்ம கும்பல், அரிவாளால் சரமாரியாக வெட்டியது, பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.ஈரோடு, மண்டபம் வீதி, திருநீலகண்டர் திருமண மண்டபம் அருகேயுள்ள பகுதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி, 39; மீன் வியாபாரியான இவர், ஞாயிற்றுக்கிழமை தோறும் கொல்லம்பாளையம் ரயில்வே காலனி மாநகராட்சி பள்ளி அருகில் மீன் வியாபாரம் செய்வார். திருமணமாகி ஐந்து வயதில் மகன் உள்ளார். கருத்து வேறுபாட்டால் மனைவி பிரிந்து சென்று விட்டார். சத்தியமூர்த்தி தனியாக வசித்து வருகிறார். ஞாயிற்றுக்கிழமையான நேற்று, கொல்லம்பாளையம் பகுதியில் மீன் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தார்.காலை, 9:30 மணியளவில் இரு மொபட்டுகளில் நான்கு பேர் வந்தனர். கடை முன் வாகனங்களை நிறுத்தி விட்டு, அரிவாளுடன் இறங்கி சத்தியமூர்த்தியை வெட்ட முயன்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்தவர் உயிர் பிழைக்க ஓட்டம் பிடித்தார். ஆனாலும் ஓடஓட துரத்தி சென்று சரமாரியாக வெட்டினர். கழுத்து, கை, முகம், தலையில் வெட்டு காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் விழுந்தார். இதை தொடர்ந்து வாகனங்களில் ஏறி கும்பல் சாவகாசமாக சென்றது. அதேசமயம் கடைக்கு மீன் வாங்க வந்திருந்த வாடிக்கையாளர்கள், அதிர்ச்சி அடைந்து ஓட்டம் பிடித்தனர். சூரம்பட்டி போலீசார் சத்தியமூர்த்தியை மீட்டு, அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். பட்டப்பகலில் கொலை வெறி தாக்குதல் நடத்திய கும்பலால், அப்பகுதி மக்கள் பீதி அடைந்தனர். சூரம்பட்டி போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.௪ பேர் கும்பல் கைதுசத்தியமூர்த்தியை வெட்டி சாய்த்த, ஈரோடு, ஆணைக்கல்பாளையம் சந்திரசேகரன் மகன் பிரதாப், 21; ஈரோடு, சாஸ்திரி நகர், கந்தசாமி மகன் வைரவேல், 21; சேலம், சங்ககிரி, மாதேஸ்வரன் மகன் மணிகண்டன், 21; ஈரோடு, பெரியார் நகர் ராஜா மகன் சாம்சுந்தர், 22, என நான்கு பேரை, சூரம்பட்டி போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இவர்கள் மீது போலீஸ் ஸ்டேஷனில் கஞ்சா வழக்கு நிலுவையில் உள்ளதாகவும், போலீசார் தெரிவித்தனர்.