உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / துாய்மை பணியாளர்களுக்கு மதிய நேர பணிகள் ரத்து

துாய்மை பணியாளர்களுக்கு மதிய நேர பணிகள் ரத்து

ஈரோடு : ஈரோடு மாநகராட்சியில், 4 மண்டலங்களிலும் பணியாற்றும் துாய்மை பணியாளர்களது பணி நேரம் மாற்றப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில், நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த சில நாட்களாக, 108 டிகிரி முதல் 111 டிகிரி வரை வெயில் பதிவாகி வருகிறது. தற்போது அக்னி நட்சத்திரம் வெயிலும் சேர்த்து வாட்டி வதைத்து வருகிறது. வெயில் தாக்கம் காரணமாக, பகல் நேரங்களில் சாலைகளில் பொதுமக்கள் நடமாட முடியாமல் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். வெப்ப அலை வீசுவதால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும், பஸ்சில் செல்பவர்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, ஈரோடு மாநகராட்சியில் பணியாற்றும் துாய்மை பணியாளர்கள், கொளுத்தும் வெயிலால் அவதிப்படுகின்றனர். பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, மதிய நேர பணிகள் ரத்து செய்யப்பட்டு அவர்களது பணி நேரம் மாற்றப்பட்டுள்ளது.காலை 6:00 முதல் 11:00 மணி வரை ஒரு ஷிப்ட், மாலை 4:00 முதல் இரவு 9:00 மணி வரை 2-வது ஷிப்ட் என மாற்றப்பட்டுள்ளது. இதேபோன்று குப்பை கிடங்கு மற்றும் குப்பைகளை உரமாக்கும் மையங்களிலும் பணியாற்றும் துாய்மை பணியாளர்களுக்கும் பணி நேரம் மாற்றப்பட்டுள்ளது.இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது : ஈரோடு மாநகராட்சியில், 4 மண்டலங்களிலும் பணியாற்றும் துாய்மை பணியாளர்களது பணி நேரம் மாற்றப்பட்டுள்ளது. குறிப்பாக பகல், 12:00 மணி முதல் மாலை, 4:00 மணி வரை துாய்மை பணிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. காலை ஒரு ஷிப்ட், மாலை ஒரு ஷிப்ட் என, 2 ஷிப்ட் மட்டுமே பணிகள் நடக்கிறது. காலை பணிக்கு வருபவர்கள் மாலை பணிக்கு வர மாட்டார்கள். வெயில் தாக்கம் குறையும் வரை, மதிய நேர பணிகள் வழங்கப்படாது. இவ்வாறு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ