நாற்று நடும் பணியில் வடமாநில தொழிலாளர் ஒரு ஏக்கருக்கு கூலி ரூ.5,000
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்தில், 15 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.தற்போது வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், ஆர்.என்.புதுார், சுண்ணாம்பு ஓடை, பி.பெ.அக்ரஹாரம், வைரபாளையம், கருங்கல்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், நெல் சாகுபடி பணி தொடங்கி நடந்து வருகிறது. தற்போது இப்பகுதிகளில் நாற்று நடவு பணி தீவிரமாகியுள்ளது.தொழிலாளர்கள் பற்றாக்குறையால் பல இடங்களில் மேற்கு வங்கம், உத்தரபிரதேசம், பீஹார், ஓடிசா மாநில தொழிலாளர்கள், நாற்று நடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: உள்ளூர் தொழிலாளர் நுாறு நாள் வேலை திட்டத்துக்கு சென்று விடுவதால், விவசாய பணிக்கு ஆட்கள் பற்றாக்குறை உள்ளது. நாற்று கட்டுதல், சுமந்து வருதல், நடவு செய்தல் என ஒவ்வொரு வேலைக்கும் தனித்தனியாக ஆட்களை அழைக்க வேண்டியிருக்கிறது. இதனால் நேர விரயத்தை தவிர்க்க, அனுபவம் பெற்ற வட மாநில தொழிலாளர்களைப் பணியில் ஈடுபடுத்தியுள்ளோம். இவர்கள் ஒரு ஏக்கருக்கு, 5,000 ரூபாய் ஊதியமாக பெறுகின்றனர். தினமும், 5 ஏக்கர் வரை நடவு செய்கின்றனர். இன்னும் ஒரு வாரத்தில் நாற்று நடவுப்பணிகளை முடித்து விட்டு, சொந்த மாநிலங்களுக்கு திரும்பி விடுவார்கள். இவ்வாறு கூறினர்.