ஈரோடு மாவட்டத்தில் முதற்கட்டமாக 5,000 வீடுகளுக்கு குழாய் மூலம் காஸ்
ஈரோடு மாவட்டத்தில் முதற்கட்டமாக5,000 வீடுகளுக்கு குழாய் மூலம் காஸ்ஈரோடு, நவ. 19-நாடு முழுவதும் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், இறக்குமதி செலவை குறைப்பதற்காகவும், இயற்கை எரிவாயு பயன்பாட்டை அதிகரிக்க, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் ஈரோடு மாவட்டத்தில், மத்திய அரசின் பாரத் பெட்ரோலிய நிறுவனம் சார்பில், வீடுகளுக்கு குழாய் மூலம் காஸ் (பி.என்.ஜி., எரிவாயு) இணைப்பு வழங்கப்பட உள்ளது. இதற்கான குழாய்கள் பெருந்துறை சிப்காட்டில் உள்ள முனையத்துக்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து மாவட்டம் முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது.ஈரோடு மாவட்டத்தில் முதற்கட்டமாக, 300 கோடி ரூபாய் அளவில் நிதி ஒதுக்கப்பட்டு, 50 சதவீதம் குழாய் பதிக்கும் பணி நிறைவடைந்துள்ளது. இதில் பெருந்துறை, விஜயமங்கலம், கருமாண்டிசெல்லிபாளையம், ஈரோடு மாநகராட்சியில் முதலாவது மண்டலம் முதல் மூன்றாவது மண்டல பகுதிகளில், பிரதான பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு, சமையலறை வரை குழாய் பொருத்தப்பட்டு, இணைப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. முதற்கட்டத்தில், 5,௦௦௦ வீடுகளுக்கு காஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.இதுகுறித்து பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவன, ஈரோடு மாவட்ட துணை மேலாளர் செந்தில்குமார் கூறியதாவது: பெருந்துறை சிப்காட்டில் எங்களது நிறுவனத்தின் முனையம் (ஹப்) உள்ளது. இங்கிருந்துதான் வீடுகளுக்கு குழாய் வழியாக காஸ் வினியோகம் செய்யப்படுகிறது. இத்திட்டத்தில் நவீன தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட பிரத்யேக குழாய்களை உபயோகிக்கிறோம். ஒரு இணைப்புக்கு, 6,500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அடுத்த ஆண்டு ஒரு லட்சம் வீடுகளுக்கு காஸ் இணைப்பு தர இலக்கு நிர்ணயித்துள்ளோம். சி.என்.ஜி., எரிவாயுவில் இயங்கும் வாகனங்களுக்காக, மாவட்டத்தில் முதற்கட்டமாக, 20 இடங்களில் சி.என்.ஜி., காஸ் பங்க் அமைத்துள்ளோம். மேலும், பல இடங்களில் பங்க்குகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.