மழையால் விதை நெல் உற்பத்தி பாதிப்பு
கோபி, டிச. 14-கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், விதை நெல் தயாரிப்பு நடக்கிறது. தொடர் மழையால் விதை நெல்லை, அதன் சராசரி ஈரப்பதமான, 13 சதவீதத்துக்கு, களத்தில் உலர வைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த வகையில் தற்போது, ௧௦ டன் அளவுக்கு, குடோனில் உறக்க நிலையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சங்க விதை நெல் உற்பத்தி பிரிவினர் கூறியதாவது: சாகுபடியாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்த விதை நெல்லை, 13 சதவீதம் ஈரப்பதம் வரை உலர வைக்க வேண்டும். அதன்பின் ரகத்தை பொருத்து, 30 நாட்கள் வரை உறக்க நிலையில் வைக்கப்படும். அந்த காலக்கெடுவுக்கு பின், சுத்திகரிப்பு செய்த விதை நெல், விதைச்சான்று அலுவலரின் பகுப்பாய்வுக்கு பின் விற்பனைக்கு வழங்கப்படும். தொடர் மழையால், சுத்தம் செய்யப்படாத விதை நெல்லை உலர வைப்பதில் சிரமம் ஏற்பட்டது. கடந்த முதல் போகத்துக்கு, 150 டன் வரை விதை நெல் விற்றது. தற்போது கையிருப்பில் விதை நெல் இல்லை. இவ்வாறு கூறினர்.