உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பிரசவத்துக்கு பின் பெண் இறப்பால் சப்-கலெக்டர் ஆபீசில் குவிந்த உறவினர்கள்

பிரசவத்துக்கு பின் பெண் இறப்பால் சப்-கலெக்டர் ஆபீசில் குவிந்த உறவினர்கள்

கோபி: கோபி அருகே சுண்டப்பாளையத்தை சேர்ந்தவர், கிருஷ்ணகுமார், 29. கூலித்தொழிலாளி; இவரின் மனைவி, மைதிலி, 28. இத்தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இரண்டாவது முறையாக கர்ப்பமான மைதிலி, பிரசவத்துக்காக கடந்த வாரம் கோபி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்த பின், மைதிலிக்கு அதிகப்படியான ரத்த போக்கு ஏற்பட்டது.மேல்சிகிச்சையில் பலனின்றி, கோவை மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், கடந்த செப்.,28ல் மைதிலி இறந்தார். பிரசவத்துக்கு பின் மைதிலி இறந்ததால், அவரின் உறவினர்கள் அதே நாளில், கோபி அருகே வேட்டைக்காரன்கோவில் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில், உரிய நடவடிக்கை எடுப்பதாக, உறுதியளித்ததின் பேரின், அனைவரும் கலைந்து சென்றனர். இந்நிலையில், நுாற்றுக்கும் மேற்பட்ட மைதிலியின் உறவினர்கள், கோபி அருகே வேட்டைக்காரன் கோவிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு, கோபி சப்-கலெக்டர் ஆபீசை நேற்று காலை, 11:30 மணிக்கு அடைந்தனர். அப்போது மைதிலியின் கணவர் கிருஷ்ணகுமார், உறவினர்களுடன் சேர்ந்து, கோபி சப்-கலெக்டர் சிவானந்தத்தை சந்தித்து மனு கொடுத்தார். அந்த சமயத்தில் கிருஷ்ணகுமார் மற்றும் அவரின் உறவினர்களிடம், கோபி சப்-கலெக்டர் சிவானந்தம் பேச்சுவார்த்தை நடத்தினார்.அதுகுறித்து மைதிலியின் கணவர் கிருஷ்ணகுமாரிடம் கேட்டதற்கு, ''தவறான சிகிச்சைக்கு காரணமான கோபி அரசு மருத்துவமனையின் டாக்டர் மற்றும் நர்சை கைது செய்து, அவர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும். முதல்வரின் நிவாரண தொகை கிடைக்க வேண்டும் என வலியுறுத்தினேன். அதற்கு கோபி சப்-கலெக்டர் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்,'' என்றார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை