உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பி.எஸ்.பார்க் - மணிக்கூண்டு சாலையில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

பி.எஸ்.பார்க் - மணிக்கூண்டு சாலையில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ஈரோடு: ஈரோட்டில் பன்னீர்செல்வம் பார்க்கில் இருந்து, மணிக்கூண்டு வழியாக சத்தி ரோடு சந்திப்பு எல்லை மாரியம்மன் கோவில் வரை, சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்பு உள்ளது. குறிப்பாக பன்னீர்செல்வம் பார்க்கில் இருந்து மணிக்கூண்டு வரை, தற்காலிக கடைகள் அமைத்து ஜவுளி வியாபாரம் நடந்தது. இதனால் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பாதசாரிகள் நடந்து செல்லக்கூட முடியாத நிலையும் இருந்தது.இதனிடையே புதியதாக கட்டப்பட்டுள்ள மாநகராட்சி ஜவுளி வணிக வளாகம் விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளதால், மேலும் அப்பகுதியில் கடும் நெருக்கடி ஏற்படும் என்பதால், ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.இதன்படி மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, மாநகராட்சி தலைமை பொறியாளர் விஜயகுமார், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் சரவணன், உதவி பொறியாளர் சேகர் கொண்ட குழுவினர், நேற்று காலை ஆக்கிரமிப்பு அகற்றுவது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.இதை தொடர்ந்து ப.செ.பார்க்கில் இருந்து மணிக்கூண்டு செல்லும் சாலையை முழுமையாக அடைத்தனர். சாலையோரம் இருபுறங்களிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை தொடங்கினர். எல்லை மாரியம்மன் கோவில் வரை 1 கி.மீ., துாரம் வரை, 300 கடைகள் வரை அகற்றப்பட்டன. இதை எதிர்த்து ஜவுளி வியாபாரிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பொக்லைன் இயந்திரம் முன் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையால் கலைந்து சென்றனர். ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர், 150 பேர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஊழியர், 30 பேர் ஈடுபடுத்தப்பட்டனர்.இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: ஆக்கிரமிப்பு அகற்றிய இடங்களில் மீண்டும் ஜவுளிக்கடை அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாநகரில் ஆக்கிரமிப்பு கண்டறியப்பட்டுள்ள பிற பகுதிகளிலும், இதுபோல் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்