உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அதிகாரி கூட்டத்துக்கு ஆர்.டி.ஓ., பயணம் 10 நிமிடத்தில் முடிந்த வேளாண் குறைதீர் கூட்டம்

அதிகாரி கூட்டத்துக்கு ஆர்.டி.ஓ., பயணம் 10 நிமிடத்தில் முடிந்த வேளாண் குறைதீர் கூட்டம்

ஈரோடு, ஈரோட்டில் வருவாய் கோட்ட அளவிலான வேளாண் குறைதீர் கூட்டம் ஆர்.டி.ஓ., சிந்துஜா தலைமையில் நேற்று நடந்தது. ஆர்.டி.ஓ., நேர்முக உதவியாளர் அமுதா முன்னிலை வகித்தார்.இதில் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பேசியதாவது: கொடுமுடி, சிவகிரி உட்பட பல பகுதிகளில் 'பவர் கிரிட்' நிறுவனம் டவர்லைன் அமைத்து, மின் கம்பங்களை கொண்டு சென்று விளை நிலங்களை கையகப்படுத்தி, மரங்களை அகற்றினர். பாதிக்கப்பட்ட, 120க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ஒன்பது கோடி ரூபாய் வரை வழங்காமல் உள்ளதை பெற்றுத்தர வேண்டும். கீழ்பவானி உட்பட பல வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். பல ஆண்டுக்கு முன் இறந்தவர்களின் இறப்பு சான்றுக்கு விண்ணப்பித்து, குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஆஜராகவில்லை எனக்கூறி, சான்று வழங்காமல் அல்லது மனுவை தள்ளுபடி செய்தால் மேல்முறையீடு செய்ய ஏதுவாகும். காளிங்கராயன்பாளையம் முதல், காளிங்கராயன் வாய்க்கால் இரு கரையிலும் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, வண்டிகள் செல்லும்படி மாற்ற வேண்டும். கொடுமுடி, புதுப்பாளையம் பகுதியில் யூரியா தட்டுப்பாடாக உள்ளது. இவ்வாறு சங்க நிர்வாகிகள், விவசாயிகள் பேசினர்.கூட்டம் துவங்கி, 10 நிமிடத்தில், 'மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஆய்வு மற்றும் கூட்டம்' உள்ளதால் அங்கு செல்ல ஆர்.டி.ஓ., புறப்பட்டார். ஆனால் கூட்டத்துக்கு வந்திருந்த விவசாயிகள் சங்க நிர்வாகிகள் வேலாயுதம், சுப்பு, தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் முகிலன் போன்றோர், 'மாதத்தில் ஒரு நாள் ஒரு மணி நேரம் நடக்கும் கூட்டத்தில் கூட ஆர்.டி.ஓ., - அதிகாரிகள் பங்கேற்பதில்லை. எங்கள் குறைகளை கேட்பதில்லை. வரும் மாதங்களில், அதற்கேற்ப ஒரு நாளை தேர்வு செய்து நடத்துங்கள்' என கூச்சலிட்டனர். ஆனாலும் ஆர்.டி.ஓ., சென்றதால், ஆர்.டி.ஓ., உதவியாளர் அமுதாவிடம், விவசாயிகள் மனுக்களை வழங்கி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை