ஈரோட்டில் ஆட்டோ மீது பஸ் மோதி சேலம் பெண் பலி: 5 பேர் படுகாயம்
ஈரோடு: ஈரோட்டில், நள்ளிரவில் ஆட்டோ மீது ஆம்னி பஸ் மோதியதில் சேலம் பெண் பலியானார். 5 பேர் படுகாயமடைந்தனர்.ஈரோடு, பெரிய சேமூர் எஸ்.எஸ்.பி. நகரில் வசிப்பவர் சந்திர சேகர், 43, காய்கறி வியாபாரி. இவர் மனைவி நித்யா, 38. மகன் தரணீஸ், 17. மகள் சிவானி, 13. இவர்களது உறவினர் சேலம் மாவட்டம், ஆத்துார் மல்லியக்கரையை சேர்ந்த சுந்தர்ராஜன் மனைவி மஞ்சுளா, 45. இவர் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். வாய் பேச முடியாதவர்.ஆத்துாரில் உள்ள உறவினர் வீட்டுக்கு, 5 பேரும் சென்று விட்டு நேற்று முன்தினம் இரவு ஈரோடு பஸ் ஸ்டாண்ட் வந்தனர். பின்னர் அனைவரும் ஆட்டோவில் வீட்டுக்கு புறப்பட்டனர். ஈரோடு சோழன் வீதியை சேர்ந்த கணேசன், 45, ஆட்டோவை ஓட்டினார். அவரது சீட்டுக்கு அருகே தரணீஸ் அமர்ந்து இருந்தார்.மேட்டூர் சாலையில் ஆட்டோ சென்று, முனிசிபல்காலனி பிரிவில் எவ்வித சைகையும் செய்யாமல், இன்டிகேட்டரும் போடாமல் வேகமாக வலப்புறம் நள்ளிரவு, 11:50 மணிக்கு திரும்ப முயற்சித்தார். அப்போது பழனியில் இருந்து ஈரோடு, சேலம் வழியாக பெங்களூரு செல்லும் தனியார் ஆம்னி பஸ் ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோ நசுங்கியது. அதில் பயணித்த மஞ்சுளா படுகாயங்களுடன் சம்பவ இடத்திலேயே பலியானார். ஆட்டோ டிரைவர் கணேசன் உள்ளிட்ட ஐந்து பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை, ஜி.ஹெச். போலீசார் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆட்டோ டிரைவர் கணேசனின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது.ஆம்னி பஸ் ஓட்டி வந்த, கரூர் அத்திபாளையம் இந்திரா நகரை சேர்ந்த பூபதி, 38, மீது ஜி.ஹெச். போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.