கடை வாடகைக்கு ஜி.எஸ்.டி., கண்டித்து 29ல் கடையடைப்பு
ஈரோடு: கடை வாடகைக்கு, 18 சதவீத ஜி.எஸ்.டி., வரி விதிப்பை கண்டித்து, ஈரோடு கிளாத் மெர்ச்சன்ட்ஸ் அசோசியேசன் சார்பில் வரும், 29ல் கடையடைப்பு நடத்துகின்றனர்.இதுபற்றி அமைப்பின் செயலாளர் பாலசுப்பிரமணியன் கூறியதாவது: அனைத்து வகை வாடகை கட்டடங்கள், கடைகளுக்கு, 18 சதவீத ஜி.எஸ்.டி., என்பது, வணிகர்களை கடுமையாக பாதிக்கும். பெரிய வியாபாரிகள், வணிகர்கள் ஜி.எஸ்.டி.,யை 'இன்புட்' என்ற ரீதியில் திரும்ப பெற இயலும். குறைந்த வர்த்தகத்தில் தொழில் செய்யும் வணிகர்கள் திரும்ப பெற இயலாது. 18 சதவீத ஜி.எஸ்.டி.,யை முழுமையாக நீக்க கோரி வரும், 29ல் ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்தை ஈரோடு கிளாத் மெர்ச்சன்ட்ஸ் அசோசியேசன் மற்றும் இதனுடன் இணைந்த அமைப்புகளும் நடத்துகிறது. ஈரோடு பகுதியில், 5,000க்கும் மேற்பட்ட கடைகள், குடோன்கள் கடையடைப்பில் பங்கேற்பார்கள். இவ்வாறு கூறினார். ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கம், ஈரோடு வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கமும், இந்த போராட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்துள்ளன.