ஈரோட்டில் சொத்துக்காக தாயை கொன்ற மகன் கைது 2022ல் தந்தையை கொலை செய்து ஜாமினில் வந்தவர்
ஈரோடு: ஈரோட்டில் சொத்து பிரச்னைக்காக தாயை அடித்து கொலை செய்த மகன், அவரது சடலத்துடன் ஒருநாள் முழுவதும் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஈரோடு வேப்பம்பாளையத்தை சேர்ந்த தம்பதி பழனிச்சாமி-ருக்மணி, 65; இவர்களின் மகன் ரவிக்குமார், 43; மகள் பிரியதர்ஷினி. இவர், 14 ஆண்டுக்கு முன் காதல் திருமணம் செய்து கணவருடன் சென்று விட்டார். அரசில் அலுவலராக பணியாற்றி வருகிறார். தாயுடன் அவ்வப்போது போனில் பேசி வந்துள்ளார். நேற்று மாலை, 5:30 மணியளவில் ருக்மணி, வீட்டில் இறந்து கிடப்பதாக ஈரோடு தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சென்று பார்த்த போது ருக்மணி சடலம் கிடந்தது. வலது கை எலும்பில் முறிவு ஏற்பட்டு இருந்தது தெரியவந்தது. வீட்டில் மகன் ரவிக்குமாரும் இருந்தார். அவரிடம் விசாரித்ததில், சொத்துக்காக மரக்கட்டை மற்றும் கம்பியால் தாயை தாக்கி கொலை செய்தது தெரியவந்தது. நேற்று முன்தினம் இரவு சம்பவம் நடந்துள்ளது. ஆனால் நேற்று மாலை வரை வெளியுலகிற்கு தெரியவில்லை. தாயை கொலை செய்து விட்டு எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்த ரவிக்குமாரை, தாலுகா போலீசார் விசாரணைக்காக ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். ருக்மணி உடலை பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து போலீசார் கூறியதாவது:பிச்சாண்டாம்பாளையத்தில் ஒன்றரை ஏக்கர் நிலம், கணவர் பழனிச்சாமி பெயரில் இருந்தது. இதை தன் பெயருக்கு எழுதி தருமாறு தந்தையுடன் தகராறு செய்து, 2022 மே 2ல் அவரை மரக்கட்டையால் அடித்து ரவிக்குமார் கொலை செய்தார். தாலுகா போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறை சென்றார். ஜாமின் பெற்று வந்த பின் தாயுடன் வசித்தார். மீண்டும் சொத்து தகராறு ஏற்பட்டு தாயையும் கட்டையால் தாக்கி கொலையை செய்துள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர். சொத்துக்காக தந்தையை கொலை செய்த நிலையில், தாயையும் கொலை செய்தது, பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ரவிக்குமார் திருமணம் ஆகாதவர் என்று போலீசார் தெரிவித்தனர்.