அ.தி.மு.க., - கம்யூ., கைகோர்ப்பு நகராட்சி கூட்டத்தில் ஆச்சர்யம்
அவிநாசி, திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி நகராட்சியில், கவுன்சிலர்களின் மாதாந்திர கூட்டம் நேற்று நடந்தது. தலைவர் குமார் தலைமை வகித்தார். கூட்டம் துவங்கியவுடன் அ.தி.மு.க. - இ.கம்யூ., - மா.கம்யூ., கவுன்சிலர்கள் பேசியதாவது: குடிநீர், சாக்கடை கால்வாய், ரோடு மற்றும் பொதுக் கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்வதற்காக, 1.11 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி பணிகள் நடைபெற கூட்டத்தில் தீர்மானம் வைக்கப்பட்டது. 27 வார்டுகளுக்கும் பொது நிதியை சமமாக பகிர்ந்து அளிக்க வேண்டும். அனைத்து வார்டு பகுதிகளிலும் அடிப்படை வசதிகள் முழுமை பெறாமல் பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இவ்வாறு பேசினர்.அதை தொடர்ந்து ''தி.மு.க., கவுன்சிலர்களின் வார்டுகளுக்கு மட்டும் பொதுநிதியை ஒதுக்கி பணிகள் துவங்க தீர்மானம் வைக்கப்பட்டதாக கூறியும், அனைவருக்கும் பொது நிதியை சமமாக ஒதுக்கீடு செய்தால் மட்டுமே தீர்மானத்திற்கு ஒத்துழைப்போம்'' என்று கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் அ.தி.மு.க. - இ.கம்யூ., - மா.கம்யூ., கவுன்சிலர்கள் கூட்ட அரங்கில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். இதனால் நகராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. கூட்டம், 15 நிமிடம் ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின், அ.தி.மு.க. - கம்யூ., கவுன்சிலர்களின் வார்டுகளுக்கும் தலா, 10 லட்சம் ரூபாய் பொது நிதியிலிருந்து ஒதுக்குவதாக தலைவர் குமார் தீர்மானத்தை கொண்டு வந்தார். இதனால், போராட்டம் கைவிடப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.