8 ஆண்டுகளுக்கு முன் நிலம் ஆர்ஜிதம் செய்தும் கட்டப்படாத பாலம்
டி.என்.பாளையம்: நஞ்சை புளியம்பட்டி அருகே சேதமான பாலத்தை அகற்றி, புதிய பாலம் அமைக்க, ஈரோடு கலெக்டர், நெடுஞ்சாலை துறை அமைச்சருக்கு, கொடிவேரி அணை-பவானி நதி பாசன விவசாயி சங்க தலைவர் சுபி தளபதி கடிதம் அனுப்பியுள்ளார்.கடிதத்தில் கூறியதாவது: கோபி அருகே டி.என்.பாளையம் யூனியனை இணைக்கும் நஞ்சை புளியம்பட்டி அருகே பவானி ஆற்றின் குறுக்கே, 1931ல் பாலம் கட்டப்பட்டது. அன்றைய போக்குவரத்து சூழலுக்கு ஏற்ப, 4.80 மீ., அகலத்தில் கட்டினர். இன்றைய நிலையில் ஒரு கனரக வாகனம் செல்லவே போதிய அகலமில்லை. இதனால் போக்குவரத்து நெரிசல், விபத்து அடிக்கடி நடக்கிறது. நுாற்றாண்டை தொடவுள்ளதால், பாலத்தின் உறுதி தன்மை குறைந்துள்ளது. இது தடப்பள்ளி வாய்க்கால் பாசன ஆயக்கட்டு நிலங்களையும், அரக்கன்கோட்டை பாசன ஆயக்கட்டு நிலங்களையும், சத்தி-பவானி சாலை, கோபி-ஈரோடு சாலையையும் இணைக்கும் பாலமாக உள்ளது. எனவே இப்பாலத்துக்கு பதில் புதிய மாற்றுப்பாலம் அமைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்துகிறோம்.இதன் அடிப்படையில், 2016ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, 110 விதியின் கீழ் இப்பாலம் புதிதாக அமைக்கப்படும் என அறிவித்தார். இதற்காக நில ஆர்ஜிதம், அடிப்படை பணியும் நடந்தது. இதுவரை புதிய பாலம் அமைய, ஆயத்தப்பணிகளை அரசு மேற்கொள்ளவில்லை. எட்டு ஆண்டாக அறிவிப்பாகவே உள்ளது. பாலம் அமைக்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும். இவ்வாறு கடிதத்தில் தெரிவித்துள்ளார்.